மனிதர்களை பாதிக்கும் மெடாநியூமோவைரஸ் எனப்படும் எச்எம்பிவி வைரஸ், கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட சில நிமிடங்களில், இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது.
சீனாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் மெடாநியூமோவைரஸ் எனப்படும் எச்எம்பிவி வைரஸ் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் மிகக் கவனத்துடன் பங்குச் சந்தைகளை அணுகியதன் பலனாக, சென்செக்ஸ் 1,300 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 1.7 சதவீத சரிவையும் கண்டன.
வைரஸ் பாதிப்பால், அச்சம் காரணமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நடுத்தர மற்றும் சிறு நிறுவனப் பங்குகளை அதிகம் பேர் விற்கத் தொடங்கியதே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து பங்குகள் விற்கப்பட்டதால் சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் சரிந்து இன்றைய தினம் 77,915.54 என்ற மிகக் குறைந்த புள்ளிகளில் வர்த்தகமானது. இதுபோல நிஃப்டியும் 23,600 என்ற அளவில் வர்த்தகமானது.
இதையும் படிக்க.. எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு.. மீண்டும் பொதுமுடக்கம் வருமா?
மெட்டல்ஸ், பொதுத் துறை வங்கிகள், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, நிதித்துறை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிறுவனங்கள். இந்திய யூனியன் வங்கிப் பங்குகள் 7 சதவீதமும், பரோடா வங்கி, எச்பிசிஎல், பிபீசிஎல், டாடா ஸ்டீல், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் மற்றும் பிஎன்பீ வங்கிப் பங்குகள் தலா 4-5 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டன.
சென்செக்ஸ் குறியீட்டில், எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கோடக் மகிந்திரா வங்கி உள்ளிட்டவையும் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.
எச்எம்பிவி பாதிப்பு
நாட்டில் இரண்டு குழந்தைகளுக்கு எச்எம்பிவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்று முற்பகலில் மத்திய அரசு தகவலை உறுதி செய்திருந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு குழந்தைகளுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. பிறகு, குஜராத்திலும் ஒருவருக்கு எச்எம்பிவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
பிற காரணிகள் என்னென்ன?
எந்தெந்தப் பங்குகள் வருவாய் ஈட்டுகின்றன, இந்த வாரம் தொடங்கிய மூன்றாம் காலாண்டின் எதிர்பார்ப்புகள், டிரம்ப் பதவியேற்றதும் நிலைமை மாறுவது என பல்வேறு காரணிகளை முதலீட்டாளர்கள் கண்காணித்து வருவதும், பெரிய அளவில் இன்று பங்குகள் வாங்கப்படாத, நிலையில், இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அச்சப்பட ஒன்றுமில்லை
எச்எம்பிவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், ஆண்டு முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, நாட்டில் அபாயநிலை எதுவும் ஏற்படவில்லை என்றும், மருத்துவமனையில் வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளில் ஒன்று குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும், ஒரு குழந்தை குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.