சீனாவில் பரவிவரும் எச்எம்பிவி வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக கர்நாடகத்தில் 2 குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் அச்சப்பட வேண்டாம், முன்னெச்சரிக்கையோடு இருங்கள் என மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு பெங்களூருவில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் அவ்வைரஸ் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
2001ஆம் ஆண்டு நெதர்லாந்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது.
இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுவிடுதலில் சிரமம் போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளன. மிகத் தீவிரமான பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நிமோனியா போன்ற நுரையீரல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
குழந்தைகளுக்கும், மூத்தக் குடிமக்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையோருக்கு இவ்வகை வைரஸ் அதிகம் பாதிக்கிறது.
எச்எம்பிவி வைரஸ் பாதிப்புக்கு இதுவரை சிகிச்சையோ தடுப்பூசியோ கண்டறியப்படவில்லை. முறையான ஓய்வு மற்றும் நீரேற்றம் (அதிக அளவு தண்ணீர் குடிப்பது) செய்வதன் மூலம் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம். கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியாகி ஆக்சிஜன் சுழற்சி செய்துகொள்ள வேண்டும்.
இதையும் படிக்க | எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு.. மீண்டும் பொதுமுடக்கம் வருமா?
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இருமல், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும்
கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும்
அறிகுறிகள் இருந்தால் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்
கைக்குட்டையை நாள்தோறும் துவைத்துப் பயன்படுத்தவும்
காய்ச்சல் உள்ள நபர்களிடம் இடைவெளியை கடைபிடிக்கவும்
மற்றவர்களின் துண்டு, ஆடைகளைப் பயன்படுத்த வேண்டாம்
பொது இடங்களில் உழிழ்வதைத் தவிர்க்கவும்
பொது இடங்களில் முகக்கவசம் அணியவும்
பொது வாகனப் பயன்பாட்டைத் தவிர்க்கவும்