![எஸ்.என். சுப்ரமணியன்](http://media.assettype.com/dinamani%2F2025-01-10%2Filwlrcop%2FTNIEimport2023914originalSNSubrahmanyan.avif?w=480&auto=format%2Ccompress&fit=max)
வீட்டில் மனைவி முகத்தை எத்தனை மணி நேரம் பார்ப்பீர்கள் என்றும் அதிக நேரம் அலுவலகத்தில் பணியாற்றுமாறும் வலியுறுத்தியிருந்த எல்&டி நிர்வாகி சுப்ரமணியன், ஊழியர்களை விட 535 மடங்கு சம்பளம் வாங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி பேசியதைத் தொடர்ந்து அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
90 மணி நேர வேலைக்கு ஆதரவாகப் பேசிய எல்&டி நிர்வாகி எஸ்என் சுப்பிரமணியன், வீட்டில் உட்கார்ந்துகொண்டு என்னதான் செய்வீர்கள்? எத்தனை மணி நேரம்தான் உங்கள் மனைவியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க முடியும்? இல்லை மனைவிதான் எத்தனை மணி நேரம் கணவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியும்? வாருங்கள், அலுவலகத்துக்கு விரைவாக வந்து வேலையைத் தொடங்குங்கள் என்று கூறியிருந்தார்.
அது மட்டுமல்லாமல், உங்களை ஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்ய வைக்க முடியவில்லையே என்றுதான் நான் கவலைப்படுகிறேன். உங்களை ஞாயிற்றுக்கிழமையிலும் வேலை செய்ய வைக்க முடிந்தால், நான் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி அடைவேன். ஏன் என்றால் நான் ஞாயிற்றுக்கிழமையிலும் வேலை செய்கிறேன் என்று சுப்பிரமணியன் பேசிய விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.
ஆனால் அவர் எப்போது பேசினார் என்பது தெரியவரவில்லை. அவரது பேச்சு வைரலான நிலையில், மற்ற ஊழியர்களின் சம்பளம் மற்றும் இவரது சம்பளம் பற்றிய பேச்சும் எழுந்துள்ளது.
அதாவது, எல்&டி நிறுவனத்தின் 2024ஆம் நிதியாண்டின் சம்பள விவரம் எடுத்து ஆராயப்பட்டுள்ளது. அதில், கடந்த 2024ல் எல்&டி நிறுவனத்திடமிருந்து சுப்பிரமணியன், ரூ.51.05 கோடி பெற்றிருப்பதாகவும், இதில் ரூ.3.6 கோடி சம்பளம், ரூ.35.28 கோடி கமிஷன் என உள்ளடக்கம். ஆனால், எல்&டி நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் சராசரி ஆண்டு வருவாய் ரூ.9.55 லட்சம்.
மற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என்பது 1 சதவீதத்தில் இருக்கும் நிலையில், சுப்பிரமணியனுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.