
கேரளத்தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்பவர் 2022 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டதுடன், நாளை தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
கேரளத்தில் பராசலாவைச் சேர்ந்த ஷரோன் ராஜ் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த கிரீஷ்மாவும் 2022 ஆம் ஆண்டில் காதலித்து வந்தநிலையில், கிரீஷ்மா வேறொருவரை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால், இதனை ஷரோன் எதிர்த்ததால், அவரை 2022, அக். 14-ல் தனது வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா, விஷம் கலந்த பானம் ஒன்றை ஷரோனுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, மறுநாள் ஷரோனுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், 2022, அக். 25-ல் இதயம் மற்றும் பிற உறுப்புகளின் செயலிழப்பு காரணமாக ஷரோன் உயிரிழந்தார்.
இந்த நிலையில், ஷரோனின் உயிரிழப்பில் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், இது திட்டமிடப்பட்ட கொலை என்று கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, துணை ஆணையர் ஜான்சன் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில், கிரீஷ்மா உள்பட அவரது தாயாரும், தாய்மாமனும்தான் ஷரோனின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையும் படிக்க: நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது!
இதனையடுத்து, கிரீஷ்மா மீது கடத்தல் அல்லது கொலைக்கு கடத்தல், விஷத்தால் காயம் ஏற்படுத்துதல், கொலைக்கு தண்டனை, ஆதாரங்களை அழித்தல் ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், ஜாமீன் கோரிய கிரீஷ்மாவுக்கு 2023, செப். 25-ல் ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், அவரது தாயாருக்கும் தாய்மாமனுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இருந்து கிரீஷ்மாவின் தாயார் விடுவிக்கப்பட்டார். மேலும், கிரீஷ்மாவும், அவரின் தாய்மாமனும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கின் தண்டனை நாளை அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.