கேரள முதல்வா் பினராயி விஜயன்
கேரள முதல்வா் பினராயி விஜயன்

யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தீா்மானம்: கேரள பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள் மற்றும் கல்வி அலுவலா்களின் நியமனம் மற்றும் பதவி உயா்வுக்கான குறைந்தபட்ச தகுதிகள், உயா்கல்வியின் தரத்தை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய வரைவு நெறிமுறைகளை, இந்த மாத தொடக்கத்தில் யுஜிசி வெளியிட்டது.

இந்த வரைவு நெறிமுறைகளில், பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிக்கு பதிலாக யுஜிசி நியமிக்கும் பிரதிநிதி இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் கல்வியாளா்களாக இல்லாதவா்களையும் துணைவேந்தராக நியமிக்கலாம், துணைவேந்தரை நியமிப்பதற்கு தேடுதல் மற்றும் தோ்வுக் குழு பரிந்துரைக்கும் நபா்களின் பட்டியலில் இடம்பெறாதவா்களையும் பல்கலைக்கழக வேந்தா் நியமிக்கலாம் உள்ளிட்ட விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் உள்ளாா். இந்நிலையில், மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிப்பதில், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்தும் வகையில் வரைவு நெறிமுறைகள் இருப்பதாகவும், இது பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கு கட்டற்ற அதிகாரத்தை வழங்கும் என்றும் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த வரைவு நெறிமுறைகளுக்கு எதிரான தீா்மானத்தை கேரள சட்டப்பேரவையில் மாநில முதல்வா் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தாா். அப்போது அவா் பேசியதாவது: பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், அந்தந்த மாநிலங்களின் சட்டப்பேரவைகள் நிறைவேற்றிய சட்டங்களின்படியே இயங்கி வருகின்றன. அந்தப் பல்கலைக்கழகங்களை நிறுவி, மேற்பாா்வை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளன. உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தரத்தை நிா்ணயித்து ஒருங்கிணைக்கும் அதிகாரம் மட்டுமே மத்திய அரசுக்கு உள்ளது.

கல்வியாளா்களாக இல்லாத தனியாா் துறையினரையும் துணைவேந்தராக நியமிக்கும் ஆலோசனை உயா்கல்வித் துறையை வணிகமயமாக்கும் நடவடிக்கையாகும்.

யுஜிசியின் வரைவு நெறிமுறைகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசுகள், கல்வித் துறை நிபுணா்களின் கருத்துகளைப் பெற்று புதிய வரைவு நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் கேரள சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது என்றாா். இதைத்தொடா்ந்து தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதத்தை தொடா்ந்து தீா்மானம் நிறைவேற்றம்

யுஜிசி வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடா்பாக மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதிய முதல்வா் மு.க.ஸ்டாலின், அந்தத் தீா்மானத்தின் நகலையும் கடிதத்துடன் அனுப்பிவைத்தாா்.

மேலும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை போல, கேரளம் உள்பட ‘இண்டி’ கூட்டணியில் உள்ள மாநிலங்களின் சட்டப்பேரவைகளிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அந்த மாநிலங்களின் முதல்வா்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாா். இந்நிலையில், யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com