ரூ. 15,000 கோடி சொத்துகளை இழக்கும் சைஃப் அலிகான் குடும்பம்!

சைஃப் அலிகானின் பட்டோடி குடும்ப சொத்துகள் அரசுடமையாவது பற்றி...
சைஃப் அலிகான்
சைஃப் அலிகான் ANI
Published on
Updated on
1 min read

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் பட்டோடி குடும்பத்துக்குச் சொந்தமான ரூ. 15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மும்பையில் சைஃப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த திருடன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த அவர், அறுவை சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சைஃப் அலிகான் குடும்பத்தின் பூர்விகச் சொத்துகள் அரசுடமையாக்கப்படும் சூழல் நிலவுகிறது.

ரூ. 15,000 கோடி சொத்துகள்

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகானின் மகன் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான். மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த நவாப்பான பட்டோடி ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த குடும்பத்துக்கு போபாலில் அரண்மனை, நிலங்கள், கட்டடங்கள் என ரூ. 15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. நடிகர் சைஃப் அலிகான் சிறுவயதில் போபால் அரண்மனையில்தான் வளர்ந்தார்.

1950 ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது, பட்டோடி வாரிசாக கருதப்பட்ட அபிதா சுல்தான் தனது மகனுடன் பாகிஸ்தான் சென்றுவிட்டார். இதனால், இந்திய குடியுரிமையையும் இழந்தார். இதையடுத்து, அவரது சகோதரி சஜிதா சுல்தான் வாரிசாக கருதப்பட்டார். சுஜிதாவின் மகன் மன்சூர் அலிகான்.

இந்த நிலையில், பட்டோடி குடும்பத்துக்கு சொந்தமான அனைத்து சொத்துகளும் எதிரி சொத்துகள் என அறிவித்து 2014 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. எதிரி சொத்துகள் என அறிவித்தால், அது மத்திய அரசுக்கு சொந்தமாகிவிடும்.

நீதிமன்றத்தில் வழக்கு

மத்திய அரசின் நோட்டீஸை எதிர்த்து 2015ஆம் ஆண்டில், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நடிகர் சைஃப் அலிகான் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து மத்திய அரசின் நோட்டீஸுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து, சைஃப் அலிகானும் அடிக்கடி போபால் சென்றுவந்தார்.

இதனிடையே, 2016 ஆம் ஆண்டு நவாப் சொத்துகளுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று புதிய நோட்டீஸை மத்திய அரசு வெளியிட்டது.

தொடர்ந்து, கடந்தாண்டு டிசம்பர் 13 ஆம் தேதி சைஃப் அலிகானின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், சைஃப் அலிகானின் சொத்துகளை அரசுடமையாக்குவதற்கான தடையும் நீங்கியது.

மேலும், 30 நாள்களுக்குள் சைஃப் அலிகான் மேல்முறையீடு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நீதிமன்றம் வழங்கிய 30 நாள்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை சைஃப் அலிகான் தரப்பில் மேல்முறையீடு செய்யவில்லை.

இதனால், எந்நேரமும் சைஃப் அலிகானின் குடும்ப சொத்துகளை போபால் மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தும் சூழல் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com