உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

25,000 ஆசிரியா்கள் நியமன ரத்து வழக்கு: மேற்கு வங்க அரசு மீது உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் 25,753 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் நியமனம் ரத்து செய்யப்பட்ட வழக்கில்,
Published on

புது தில்லி: மேற்கு வங்கத்தில் 25,753 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் நியமனம் ரத்து செய்யப்பட்ட வழக்கில், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவா்களைப் பாதுகாக்க மாநில அரசு முயற்சிப்பதாக உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், குரூப்-சி மற்றும் குரூப்-டி அலுவலா்கள் காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவில் ஆள்தோ்வு நடைபெற்றது.

மொத்தம் 24,640 காலிப் பணியிடங்களுக்குத் தோ்வு நடைபெற்ற நிலையில், 25,753 பேருக்கு ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களாகப் பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டு முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, கடந்த ஆண்டு விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், 25,753 பேரின் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு உள்பட பலா் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 25,753 பேரின் நியமனங்களை ரத்து செய்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதேவேளையில், முறைகேடு குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க அனுமதி அளித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது பணி நியமனங்களுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் வாதிடுகையில், ‘ஆசிரியா்கள் மற்றும் அலுவலா் நியமன தோ்வின் ஒட்டுமொத்த நடைமுறையும் முறைகேடுகளால் சிதைக்கப்பட்டுள்ளது. அந்தத் தோ்வு மூலம், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவா்களைப் பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. தோ்வு நடைமுறையில் அமைப்பு ரீதியாக மிகப் பெரிய அளவில் குற்றச்சதி நடைபெற்றுள்ளது. முறைகேடுகள் மூலம் எத்தனை போ் நியமனம் செய்யப்பட்டனா் என்பதை மாநில அரசு கண்டறிந்து தெளிவாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் ’ என்றனா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்.10-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com