
பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் சுதந்திர நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாநிலமாக உத்தரகண்ட் மாறியிருக்கிறது.
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்டத்தின் அரசாணையை வெளியிட்டதோடு, பொது சிவில் சட்ட விதிகளை அறிமுகப்படுத்தி, பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தது தொடர்பான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
மாநிலத்தின் மிக முக்கிய நிகழ்ச்சி, முதல்வர் தாமியின் அதிகாரபூர்வ இல்லமான முக்ய சேவக் சதன் அரங்கில் நடைபெற்றது. இதில், உத்தரகண்ட் அமைச்சர்கள் மற்றும் பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது, எந்தவொரு மதத்தினரையும் குறிவைத்து அல்ல, இது அனைத்து மோசமான பழக்க வழக்கங்களையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு சட்ட கருவியாகும்.
பொது சிவில் சட்டம் பெண்களுக்கு எதிரான சமத்துவமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்திருப்பதால், பலதார மணம், ஹவாலா நடைமுறைகளுக்கு தடை விதிக்கப்படும். அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் பொருந்தும் என்பதால், பலதார மணம் ஒழிக்கப்படுவதோடு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமைக்கும் வழி வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை ஆகிய விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திலும் தனித்தனி சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இதை மாற்றி, அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்றும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படிக்க.. ஸோஹோ தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ராஜிநாமா!
அந்த வகையில்தான், உத்தரகண்டில் கடந்த 2022-இல் நடந்த பேரவைத் தோ்தலின்போது, மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இத்தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த நிலையில், தற்போது பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டது. பின்னா், சட்ட அமலாக்கத்துக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுக்க முன்னாள் தலைமைச் செயலா் சத்ருஹன் சிங் தலைமையில் நிபுணா் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை சமா்ப்பித்த நிலையில், இன்று உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.