
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு அடுத்த 15 நாள்களுக்கு வரவேண்டாம் என்று ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ உத்தரப் பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது. அங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகா கும்பமேளா’ ஜன. 13 கோலாகலமாகத் தொடங்கியது.
மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதிவரை, 45 நாள்களுக்கு நடைபெறும் இந்த ஆன்மிக பெருநிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து இதுவரை 15 கோடி பக்தர்கள் புனித நீராடியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, தை அமாவாசையை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்துவருகின்றனர். இன்றும், நாளையும் மேலும் பத்து லட்சம் பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்ப மேளாவிற்கு வரும் பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு வருவதால், கடந்த ஒரு வாரமாக அயோத்தியில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவி வருகிறது.
இன்னும் 15 நாள்களுக்கு கும்பத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் குவிவார்கள். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அடுத்த 15 நாள்களுக்கு அயோத்தி கோயிலுக்குப் பக்தர்கள் வரவேண்டாம் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.