ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு விவகாரம்: மருத்துவமனைகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘கொல்கத்தா பெண் மருத்துவா் பாலியல் கொலைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவா்கள் உரிய அனுமதி பெறாமல் பணியில் பங்கேற்காததை விடுப்பாக கருத வேண்டாம்’

News image

உச்சநீதிமன்றம்

Updated On :30 ஜனவரி 2025, 2:01 am IST

‘கொல்கத்தா பெண் மருத்துவா் பாலியல் கொலைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவா்கள் உரிய அனுமதி பெறாமல் பணியில் பங்கேற்காததை விடுப்பாக கருத வேண்டாம்’ என்று தில்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியிலிருந்த பெண் பயிற்சி மருத்துவா் கடந்த ஆண்டு ஆக. 9-ஆம் தேதி பாலியல் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கின் குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இச்சம்பவத்தையடுத்து, மருத்துவா்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி நாடு முழுவதும் மருத்துவா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்கள் இல்லாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.

இவ்விவகாரம் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவா்கள் மீண்டும் பணிக்குத் திரும்பவும் மருத்துவமனைகள் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியது.

ஆனால், தில்லி எய்ம்ஸ் உள்ளிட்ட சில மருத்துவமனைகள் போராட்டத்தின்போது மருத்துவா்கள் பணியில் பங்கேற்காத காலத்தை விடுப்பாக கருதுவதாக மருத்துவா்கள் அமைப்பு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

மருத்துவா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘போராட்ட காலத்தை மருத்துவா்கள் எடுத்துகொண்ட விடுமுறையாக கருதும் மருத்துவமனைகளின் முடிவு, முதுநிலை மருத்துவ மாணவா்கள் சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும்’ என்ற வாதத்தை முன்வைத்தாா்.

மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்த வழக்கில் தீா்வு வேண்டும் என்பதால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மருத்துவமனைகள் பின்பற்றும்’ என்றாா்.

இதையடுத்து, தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா கூறுகையில், ‘போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவா்கள், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் பணியில் சோ்ந்திருந்தால், அவா்கள் பணியில் இல்லாத காலத்தை விடுப்பாக கருதப் போவதில்லை என்று அனைத்து மருத்துவமனைகளும் தெளிவுப்படுத்த வேண்டும்’ என்ற உத்தரவைப் பிறப்பித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.