விவசாயிகளுக்கு ரூ. 41,000 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் உரை

விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 41,000 கோடி வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உரையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு ரூ. 41,000 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் உரை
Published on
Updated on
2 min read

விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 41,000 கோடி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று(ஜன. 31) தொடங்கியது.

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு உரையாற்றி வருகிறார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த குடியரசுத்தலைவர், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை நினைவுகூர்ந்தார்.

மக்களவையில் பேசிய அவர்,

"நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் ஆனதை இரண்டு மாதங்களுக்கு முன் கொண்டாடினோம். சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம். அனைத்து இந்தியர்களின் சார்பாக, அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்புக் குழுவில் உள்ள அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.

பழங்குடி சமூகத்தின் 5 கோடி மக்களுக்காக பழங்குடியினர் கிராம மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

2.25 கோடி சொத்துரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 41,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை இந்த அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் எனது அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது" என்று பேசினார்.

மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மூலமாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் மருந்தகங்கள் மூலமாக 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

2047ல் வளர்ந்த பாரதம் என்ற நமது இலக்கு உலகை கவர்ந்துள்ளது.

புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியாவை உலகளவில் சிறந்து விளங்கச் செய்வதே அரசின் நோக்கம். செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்திய செயற்கை நுண்ணறிவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இன்று நமது இளைஞர்கள் நிறுவனங்கள் முதல் விளையாட்டு, விண்வெளித் துறை வரை அனைத்துத் துறைகளிலும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுகிறது.

இன்று பெண்கள் அதிக எண்ணிக்கையில் போர் விமானங்களை இயக்குவது, காவல்துறையில் சேருவது மற்றும் நாட்டில் உள்ள நிறுவனங்களை வழிநடத்துவது நாடாளுமன்றத்திற்கு மிகவும் பெருமை சேர்க்கும் விஷயம்.

நமது மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சைபர் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் மோசடி, சைபர் குற்றங்கள், டீப்ஃபேக் தொழில்நுட்பம் ஆகியவை சமூக, நிதி மற்றும் தேசியப் பாதுகாப்பிற்கு கடுமையான சவால்களாக உள்ளன.

சிறு, குறு தொழில்களை மேம்படுத்தும் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றுக்கான கடன் உத்தரவாதத் திட்டம், மின் வணிக ஏற்றுமதி மையங்கள் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் வணிகத்தை அதிகரித்துள்ளன.

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, அதற்காக அதிக முதலீடு செய்யப்படுகிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்கள் 1,700 புதிய விமானங்கள் வாங்கவுள்ளதன் மூலமாக நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக முன்னேறி வருகிறது.

உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை மூலம் இணைக்கப்படும்' என்று பேசினார்.

குடியரசுத்தலைவர் உரைக்குப் பின்னர், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இரு அவைகளிலும் தாக்கல் செய்யவுள்ளார்.

பின்னர் மத்திய பட்ஜெட்டை அமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை(சனிக்கிழமை) தாக்கல் செய்கிறாா். இது, அவா் தொடா்ந்து 8-ஆவது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும்.

அதன் பின்னா் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.

கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, ரயில்வே சட்டத் திருத்த மசோதா, பேரிடா் மேலாண்மை சட்டத் திருத்த மசோதா, எண்ணெய் வயல் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத் திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் மசோதா உள்பட 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com