
நமது சிறப்பு நிருபர்
நாடாளுமன்ற வளாகத்துக்கு வரும் பொதுமக்களை முழு உடல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதையொட்டி, பாடி ஸ்கேனர்கள் எனப்படும் முழு உடல் பரிசோதனை கருவிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது இத்தகைய வசதிகள் சர்வதேச விமான நிலையங்களில் மட்டுமே உள்ளன. விமான பயணிகள் தங்களின் உடலுக்குள் ஏதேனும் அனுமதியற்ற அல்லது தடை செய்யப்பட்ட பொருள்களை மறைத்து வைத்துள்ளனரா என்பதை கண்டறிய பாடி ஸ்கேனர்கள் உதவுகின்றன.
2023, டிசம்பர் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர் மாடத்தில் இருந்து இரண்டு பேர் கீழே குதித்து வண்ண ஸ்ப்ரே அடித்த சம்பவம் அதன் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தை தாக்க பயங்கரவாதிகள் முயற்சித்த அதே நாளில் இந்த அத்துமீறல் நடந்தது.
இதன் பிறகு நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியை கவனித்து வந்த மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மக்களவை, மாநிலங்களவைச் செயலக பாதுகாவலர்கள் வசம் இருந்த பாதுகாப்பு முழுவதையும் மத்திய தொழிலக பாதுகாப்புப்படை(சிஐஎஸ்எஃப்) வசம் மத்திய அரசு ஒப்படைத்தது.
டிஜிபிக்கு அதிகாரம்: கூடுதல் அம்சமாக, சிஐஎஸ்எஃப் படையினரே நாடாளுமன்றத்துக்குள் வரும் அதிகாரிகள், பொதுமக்கள், எம்.பி.க்களின் விருந்தினர்கள், நாடாளுமன்ற பணிக்காக வரும் வெளி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி நுழைவுச்சீட்டு வழங்கும் பணியை கவனித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் நீங்கலாக மற்ற அனைவரும் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு வளாகம் மற்றும் அரங்குக்குள் நுழையும்போதும் கடுமையான சோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர். இதை மேலும் கடுமையாக்கும் வகையில் முழு பாடி ஸ்கேனர்கள் சாதனங்களை நிறுவும் சிஐஎஸ்எஃப் முன்மொழிவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்றுக்கொண்டது.
இதைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்பது இடங்களில் இந்த பாடி ஸ்கேனர் கருவிகளை நிறுவ சிஐஎஸ்எஃப் திட்டமிட்டுள்ளது. இவற்றுக்கான கொள்முதல் அதிகாரத்தை சிஐஎஸ்எஃப் தலைமை இயக்குநருக்கு மத்திய உள்துறை வழங்கியுள்ளது.
கொள்முதல் நிபந்தனைகள்: இதன்படி, கொள்முதல் செய்யப்படும் கருவிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், திரவநிலை மற்றும் மருந்து வகை, உலோகம், உலோகம் அல்லாத பொருள்கள் போன்றவற்றை கண்டறியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவை அயனியாக்கம் மற்றும் அயனியாக்கம் அல்லாத மின்காந்த கதிர் வீச்சுத்திறன் கொண்டவையாக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை நிபந்தனை விதித்துள்ளது.
மேலும், இந்த ஸ்கேனர் உயரத்தில் 2.0 மீட்டர் முதல் 2.75 மீட்டரும் அகலத்தில் 1.0 முதல் 1.6 மீட்டரும், நடக்கும்போது 0.5 மீட்டர் முதல் 1 மீட்டர் தூரத்துக்குள்ளாக பரிசோதனை தரவுகளை திரையில் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உலக அளவில் இத்தகைய பாடி ஸ்கேனர்கள், அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளன. அவற்றின் வரிசையில் இந்தியாவும் இத்தகைய வசதியை விரைவில் கொண்டிருக்கும் என்கின்றனர் உள்துறை அமைச்சக உயரதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.