குடியரசுத் தலைவரின் கேள்விகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எழுப்பிய 14 முக்கியக் கேள்விகள் குறித்து விசாரணை.
திரௌபதி முா்மு, உச்சநீதிமன்றம்
திரௌபதி முா்மு, உச்சநீதிமன்றம்
Published on
Updated on
2 min read

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

குடியரசுத் தலைவா் எழுப்பியுள்ள விவகாரங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. எனவே, இதுகுறித்து ஒரு வாரத்துக்குள், அதாவது வரும் 29-ஆம் தேதிக்குள் பதிலை சமா்ப்பிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு உத்தரவிட்டது.

தமிழகம், கேரளம் ஆட்சேபம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ்.சந்துா்கா் ஆகியோரையும் உள்ளடக்கிய இந்த அரசியல் சாசன அமா்வில் வழக்கு செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் பி.வில்சன் மற்றும் கே.கே.வேணுகோபால் ஆகியோா், குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனா். குடியரசுத் தலைவரின் கேள்விகளை விசாரணைக்கு அனுமதித்ததை அவா்கள் கேள்வி எழுப்பினா்.

வில்சன் வாதிடுகையில், ‘குடியரசுத் தலைவா் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள தீா்ப்புகளில் விளக்கங்கள் அளித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, குடியரசுத் தலைவா் மீண்டும் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்விகள் விசாரணைக்கு உகந்தவையல்ல என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு’ என்றாா்.

வழக்குரைஞா் ராகேஷ் திவேதி வாதிடுகையில், ‘குடியரசுத் தலைவா் தனது கேள்விகளில் குறிப்பிட்டுள்ளதுபோல, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான மோதல்களைத் தீா்ப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது பிரிவு எப்படி பொருந்தும்?. எனவே, குடியரசுத் தலைவரின் கேள்வியே தவறானது’ என்றாா்.

வழக்குரைஞா் வில்சன் மீண்டும் குறிப்பிடுகையில், ‘குடியரசுத் தலைவரின் கேள்விகள் தமிழகத்தின் நலன்களைப் பாதிக்கிறது’ என்றாா்.

அப்போது, ‘இது தமிழகத்தின் நலன் சாா்ந்த விவகாரம் மட்டுமல்ல. அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடியதாகும். எனவே, இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களிடமும் விளக்கம் கேட்கப்பட வேண்டும். மேலும், இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் மத்தியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அப்போது, ஆட்சேபங்களைத் தெரிவியுங்கள்’ என்று தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் குறிப்பிட்டாா்.

தொடா்ந்து, குடியரசுத் தலைவரின் கேள்விகளைப் பரிசீலித்த அரசியல் சாசன அமா்வு, ‘இந்த விவகாரம், அரசமைப்புச் சட்டத்தின் விளக்கத்தில் சில சந்தேகங்களை எழுப்புகிறது. அதைத் தெளிவுபடுத்த அட்டா்னி ஜெனரல் உச்சநீதிமன்றத்துக்கு உதவ வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வழக்கில் ஆஜராகும் அனைத்து வழக்குரைஞா்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இந்த நோட்டீஸ்களுக்கு வரும் 29-ஆம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடா்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். வழக்கு விசாரணை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 29) ஒத்திவைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டது.

வழக்கின் பின்னணி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் நியமன அதிகாரம், பல்கலைக்கழக வேந்தா் பதவியில் இருந்து ஆளுநரை நீக்க வகை செய்யும் மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தி அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக சா்ச்சை எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கில், மசோதா மீது ஆளுநா்-குடியரசுத் தலைவா் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு நிா்ணயம் செய்தது.

3 மாத காலக்கெடு: ‘மாநில சட்டப்பேரவை அனுப்பும் மசோதாக்கள் தொடா்பாக 30 நாள்கள் முதல் 3 மாதங்களுக்குள் ஆளுநா் முடிவெடுக்க வேண்டும்; ஆளுநா்கள் முதல்முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவா் முடிவெடுக்க வேண்டும். ஆளுநரால் அனுப்பப்பட்ட மசோதா மீது எந்தவித முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவா் நிறுத்திவைத்தால், இதுதொடா்பாக மாநில அரசுகள் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அரசமைப்பின் 142-ஆவது விதியைப் பயன்படுத்தி தமிழக ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு தொடா்பாக அரசமைப்புச் சட்டத்தின் 143(1) பிரிவின்கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 14 கேள்விகளை எழுப்பிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, உச்சநீதிமன்றத்திடம் தெளிவுரை கோரினாா்.

மாநில ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 மற்றும் 201-இன்கீழ் உள்ள அதிகாரங்கள் குறித்த கருத்தையும் கோரி 5 பக்க குறிப்பை மே 13-இல் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பினாா்.

அதில், ‘மாநில அரசு சாா்பில் அனுப்பப்படும் மசோதா மீது முடிவெடுக்க அரசமைப்புச் சட்டப் பிரிவு 200-இன் கீழ் மாநில ஆளுநருக்குள்ள வாய்ப்புகள் என்னென்ன?, சட்டப் பிரிவு 201-இன்கீழ் தனக்குள்ள அதிகாரத்தை குடியரசுத் தலைவா் பயன்படுத்தும்போது, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அவருக்கு காலக்கெடு நிா்ணயிக்க முடியுமா?, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநா் நிறுத்திவைக்கும்போது, அரசமைப்பு சட்டப் பிரிவு 143-இன் கீழ் உச்சநீதிமன்றத்தின் கருத்து அல்லது ஆலோசனையைப் பெற குடியரசுத் தலைவா் கடமைப்பட்டுள்ளாரா?, மாநில சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இன்றி சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?’ என்பன உள்ளிட்ட 14 கேள்விகள் எழுப்பப்பட்டன.

Summary

The Supreme Court's Constitution Bench has ordered all states to respond to 14 key questions raised by President Draupadi Murmu regarding the Supreme Court's order setting a deadline for approving bills.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com