
தொழிலதிபர் அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு அழித்துவிட்டது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார்.
இதற்கு முன்னதாகவே, ரஷியாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பேன் என டிரம்ப் கூறிய நிலையில், இந்தியா தொடர்ந்து வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், செய்தியாளர்கள் மத்தியில் புதன்கிழமை டிரம்ப் பேசுகையில், “இந்தியாவும் ரஷியாவும் செத்த பொருளாதாரங்கள், அவரவர் பொருளாதாரத்தை ஒன்றாக சேர்த்து மண்ணில் புதைத்துக் கொள்ளட்டும். இந்தியா - ரஷியா வர்த்தகம் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை” எனக் காட்டமாக தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கேள்விக்கு பதிலளித்து ராகுல் காந்தி செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”அவர் சொல்வது சரிதான். பிரதமர் மற்றும் நிதியமைச்சரைத் தவிர அனைவருக்கும் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் என்பது தெரியும். இந்த உண்மையை டிரம்ப் கூறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய பொருளாதாரத்தை உலகமே அறிந்திருக்கிறது. அதானிக்கு உதவுவதற்காக பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது.
வெளியுறவு அமைச்சர் உரையின்போது, எங்களிடம் சிறந்த வெளியுறவுக் கொள்கை இருப்பதாகக் கூறினார். ஒருபுறம் இந்தியாவை அமெரிக்கா துஷ்பிரயோகம் செய்து வருகிறது. மற்றொருபுறம் சீனா இருக்கிறது.
உலக நாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பியபோது, எந்த நாடும் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. மோடி அவரது உரையில் சீனா, டிரம்ப் பெயரையே சொல்லவில்லை. பஹல்காம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி டிரம்பின் விருந்தில் பங்கேற்கிறார். மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாக கூறுகிறார்.
டிரம்ப் 32 முறை போரை நிறுத்தியதாக கூறியுள்ளார். இந்தியாவின் 5 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ளார். 25 சதவிகிதம் வரி விதிப்பேன் எனக் கூறுகிறார். இதற்கெல்லாம் பிரதமர் மோடி பதிலளிக்காதது ஏன்? யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்?
அதானி ஒருவருக்காக மட்டுமே மோடி வேலை செய்கிறார். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் நடைபெறும். டிரம்ப் சொல்வதை மோடி செய்வார். இந்த அரசாங்கள் பொருளாதாரம், வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கைகளை அழித்துவிட்டது. நாட்டை தரைமட்டத்துக்கு வீழ்த்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.