இந்தியாவும் ரஷியாவும் 'செத்த பொருளாதாரங்கள்!' - டிரம்ப்

இந்தியா, ரஷிய நாடுகளின் பொருளாதாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் விமர்சனம்
அமெரிக்க அதிபர் விமர்சனம்
Published on
Updated on
2 min read

புது தில்லி: இந்தியாவும் ரஷியாவும் செத்த பொருளாதாரங்களைக் கொண்டிருப்பதாக விமர்சித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதித்திருந்த நிலையில், இன்று இந்தியாவை நேரடியாகத் தாக்கிப் பேசியிருக்கிறார் டிரம்ப்.

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும், ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.

உலகிலேயே, ரஷியாவிடமிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கான அபராதத்தை எதிர்கொண்டிருக்கும் முதல் நாடு இந்தியாதான்.

இந்தியாவுக்கான வரி விதிப்பு முறை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று தன்னுடைய ட்ரூத் எனப்படும் சமூக வலைத்தளத்தில், டொனால்ட் டிரம்ப் இந்தியா - ரஷியா குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

அதில், ரஷியாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் அதுபற்றி எனக்குக் கவலையில்லை. அவர்கள் தங்களது செத்தப் பொருளாதாரங்களை ஒன்றாக சேர்ந்து மேலும் வீழ்ச்சிக்குக் கொண்டு செல்கிறார்கள். அது பற்றி பரவாயில்லை.

வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை இந்தியா, ரஷியா மேலும் வீழ்ச்சிக்குக் கொண்டு செல்கிறார்கள். நாங்கள் இந்தியாவுடன் இணைந்து மிகக் குறைவான வணிகத்தையே மேற்கொள்கிறோம். அவர்களது கட்டணம் மிக அதிகம். இந்த உலகிலேயே, பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் கட்டணம் அதிகம். அதுபோல, ரஷியாவும் அமெரிக்காவும் இணைந்து வணிகம் மேற்கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே வணிக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாதது குறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில், அதிபரின் இந்த அறிவிப்பு புது தில்லி மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது, அமெரிக்கா வைக்கும் வலியுறுத்தல்கள் அனைத்தையும் இந்தியாவை ஏற்க வைப்பதற்கான உக்தி இது, அண்மைக் காலமாக ஜப்பான், பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இந்தியா மிகவும் சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது என்கிறார்கள்.

முன்னதாக, ரஷிய முன்னாள் அதிபர் மெத்வேதேவ் பேசுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவுடன் விளையாடுகிறார். இதுபோன்ற நடவடிக்கைகள் ரஷியா - அமெரிக்கா இடையே போரைத்தான் ஏற்படுத்தும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கும் பதிலளிக்கும் வகையில்தான் டிரம்ப் இன்று தன்னுடைய ட்ரூத் பக்கத்தில் இந்தியாவையும் ரஷியாவையும் ஒன்றிணைத்து செத்து பொருளாதார நாடுகள் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஐந்தாம் கட்டத்தை எட்டியிருக்கிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க அதிகாரிகள் இந்த மாதம் நான்காவது வாரத்தில் இந்தியா வரவிருக்கிறார்கள். மிக மோசமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதை விட, 25 சதவீத வரி விதிப்பே மேலானது என இந்திய அதிகாரிகள் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

US President Donald Trump has criticized India and Russia for having dead economies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com