
ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.
புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று, ’எதிர்காலப் போர்’ என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் அனில் சௌகான் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.
அப்போது, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் மோதலில் பயன்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்கள் குறித்து உரையாற்றினார்.
கருத்தரங்கில் அனில் சௌகான் பேசியதாவது:
”பஹல்காம் சம்பவம் மிகவும் கொடூரமானது. குடும்பத்தினர், குழந்தைகள் முன்னிலையில் தலையில் சுட்டுக் கொன்றனர். மதத்தை கேட்டு கொலை செய்துள்ளனர். இது நவீன உலகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. சமூகத்தில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் முதல் பயங்கரவாத சம்பவம் அல்ல இது. மேற்கத்திய நாடுகளில் ஓரிரு பயங்கரவாத சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால், இந்தியாதான் அதிகபட்ச பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. கிட்டத்திட்ட 20,000 பேர் பயங்கரவாத தாக்குதல்களால் பலியாகியுள்ளனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு வகையான திறன்களை கொண்டு தாக்குதலுக்கு முயற்சித்தன, எனவே இதில் ஆபத்தின் அளவும் அதிகமாக இருந்தது. நமது முழுமையான திறனை போர்க்களத்தில் வெளிப்படுத்தவில்லை. எங்களிடம் மிகச் சிறந்த ட்ரோன் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன.
போர் என்பது அரசியல் வரலாற்றுடன் ஒத்த சொற்கள். போர் என்பது மனித நாகரிகத்தைப் போலவே பழமையானது. எந்தவொரு போரிலும் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன. வன்முறை மற்றும் வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல்.
பாகிஸ்தானில் உள்ள அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும் என்பதே ஆபரேஷன் சிந்தூரின் குறிக்கோளாக இருந்தது. பயங்கரவாத நடவடிக்கை மூலம் இந்தியாவை பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது. பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது.
மே 10 ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு, பாகிஸ்தானின் நோக்கமானது இந்தியாவை 48 மணிநேரத்தில் மண்டியிட வைப்பதாகும். பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால், 8 மணிநேரத்தில் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் முன்வந்தனர்.
இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து என்னிடம் கேட்கப்பட்ட போது, அது முக்கியமல்ல, போரின் முடிவும் எவ்வாறு செயல்பட்டீர்கள் என்பதே முக்கியம் என்றேன்.
இழப்புகளைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது. உதாரணமாக டெஸ்ட் போட்டியை எடுத்துக் கொண்டால் இன்னிங்ஸ் வெற்றி பெற்றால், எவ்வளவு விக்கெட்டுகள், எவ்வளவு பந்துகள் மீதமுள்ளது போன்ற கேள்விகளுக்கே இடமில்லை.
குறிப்பிட்ட தரவுகளை உங்களுடன் விரைவில் பகிர்ந்துகொள்வோம். எத்தனை விமானங்களை அழித்தோம், எத்தனை ரேடார்களை அழித்தோம் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.
வான்வழிப் போரைப் பொறுத்தவரை ஆபரேஷன் சிந்தூர் வரலாறு படைத்துள்ளது. எதிரிகளுக்கு எதிராக வெற்றிகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் வான் பாதுகாப்பு வலையமைப்புகளில் ஊடுருவி, துல்லியமாகவும் ஆழமாகவும் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை, தொடர்கிறது. இது தற்காலிகமாக போர் நிறுத்தம் மட்டுமே. நமது எல்லையைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.