
புது தில்லி: நீதிபதிகள் பணி ஓய்வுபெற்றதும், அரசு பதவிகளை ஏற்பது அல்லது தேர்தலில் போட்டியிடுவது போன்றவை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கவலை தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகள், நீதித்துறைக்கு எதிராக கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் அமைந்துவிடுகிறது எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வட்டமேசை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், பணி ஓய்வுக்குப் பிறகு, இந்த வகையான ஈடுபாடுகள், எதிர்கால அரசியல் அல்லது அரசுப் பதவிகளை எதிர்பார்த்து, பணியில் இருக்கும்போது, நீதித்துறை முடிவுகள் மீது அதன் தாக்கும் இருக்கலாம் என்ற கருத்தை உருவாக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நீதிபதி ஓய்வு பெற்றதும், அரசு பதவி ஒன்றில் நியமனம் செய்யப்பட்டாலோ அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜிநாமா செய்தாலோ, அது குறிப்பிடத்தக்க நியாயமான கவலைகளை எழுப்புவதோடு, நாட்டு மக்களின் சந்தேகத்துக்கும் வழிவகுக்கிறது.
ஒரு அரசுப் பதவிக்காக தேர்தலில் போட்டியிடும் நீதிபதியால், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மை குறித்து சந்தேகங்கள் எழக்கூடும்.
அவர் தனது பதவிக் காலத்தில், அவரது தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலோ அல்லது அரசின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியிலோ ஈடுபட்டிருக்கலாம் என்ற ஐயம் ஏற்படலாம். எனவே, பணி ஓய்வுக்குப் பிறகு, இத்தகைய ஈடுபாடுகளின் நேரம் மற்றும் பதவி போன்றவை, நீதித்துறையின் நேர்மை மீது மக்களின் நம்பிக்கையைக் குறைத்து மதிப்பிடுவதற்கு வழிகோலும். ஏனெனில் இது எதிர்கால அரசு நியமனங்கள் அல்லது அரசியல் ஈடுபாட்டின் காரணமாக நீதித்துறை முடிவுகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை மக்களிடையே உருவாக்கக்கூடும் என்றும் பி.ஆர். கவாய் கூறியிருக்கிறார்.
இது தொடர்பான கவலைகளை பகிர்ந்துகொண்டபோது, தானும், தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகளும், பணி ஓய்வுக்குப் பின் அரசு வழங்கும் பதவிகளை அல்லது பொறுப்புகள் எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று பொது வெளியில் உறுதியெடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை சட்டபூர்வமான தன்மை, மக்களின் நம்பிக்கையை பராமரித்தல் என்ற தலைப்பின் கீழ் பேசிய பி.ஆர். கவாய், இந்த உறுதிப்பாடானது, நீதித்துறை மீதான சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மையை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீதித்துறை என்பது வெறும் நீதியை வழங்குவது என்பது மட்டுமல்ல, ஆனால், உண்மையை அதிகாரத்தில் வைத்திருக்கத் தகுதியான அமைப்பாகவும் இது கருதப்படுகிறது. நீதித்துறை அதன் சட்டபூர்வமான தன்மையை மக்களின் நம்பிக்கையிலிருந்துதான் பெறுகிறது, இது அரசியலமைப்பு மதிப்புகளை சுதந்திரம், ஒருமைப்பாடு மற்றும் பாரபட்சமற்ற தன்மையுடன் நிலைநிறுத்துவதன் மூலம் தான் பெறப்பட வேண்டும் என்பதையும் பி.ஆர். கவாய் வலியுறுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.