பிரியாணியும் பொரிச்ச கோழியும்.. சிறுவன் ஆசை நிறைவேறியது! கேரள அங்கன்வாடி மெனு மாற்றம்!!

கேரள அங்கன்வாடி மெனு மாற்றப்பட்டுள்ளதால் பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேண்டும் என்ற சிறுவனின் ஆசை நிறைவேறியிருக்கிறது.
கேரளம்
கேரளம்
Published on
Updated on
1 min read

திருவனந்தபுரம்: குழந்தைகள் ஒரு விஷயத்தை ஆசைப்பட்டு கேட்கும் அழகே அழகு. அதுவும் உணவுபொருளாக இருந்துவிட்டால் தனி அழகுதான். அப்படித்தான், கேரள அங்கன்வாடி மைய சிறுவன் பிரியாணியும், பொரிச்ச கோழியும் கேட்ட விடியோவும் அமைந்திருந்தது.

ஏற்கனவே தமிழகத்தில் எனக்கு பசிக்கும்ல.. என சிறுவன் கூறும் விடியோ எவ்வாறு வைரலாகியிருந்ததோ அதுபோல, அங்கன்வாடி மையத்தில் உப்புமா சாப்பிட்டுக் கொண்டே, அங்கன்வாடிகளில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி கொடுக்கலாமே என்று சிறுவன் கேட்பதும், என்ன வேண்டும் என்று அவரது அம்மா கேட்டதும், அந்தக் குழந்தையும் மிக அழகாக பிரியாணியும், பொரிச்ச கோழியும் உப்புமாவுக்கு பதிலாக வேண்டும் என்று சொல்லும் விடியோ வைரலாகியிருந்தது

இந்த விடியோ வைரலாகி 3 மாத காலத்தில், உண்மையிலேயே அங்கன்வாடி மையங்களின் உணவு மெனுவில், பிரியாணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விடியோ உலகம் முழுவதும் சென்ற நிலையில், அது கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கண்ணிலும் பட்டிருக்கிறது.

கேரள சிறுவனின் விடியோவால் அங்கன்வாடி மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி, புலாவ், பருப்புப் பாயாசம், சோயா கரி, தானிய லட்டு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி குழந்தையின் மழலைப் பேச்சுக்கு தற்போது வாழ்த்துகளும் பாராட்டுகளும், நன்றிகளும் குவிந்து வருகிறது. அது மட்டுமா, குழந்தையின் கோரிக்கையை ஏற்று மெனுவில் மாற்றம் கொண்டு வந்த கேரள அரசுக்கும்தான்.

ஏற்கனவே அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சாதாரண உப்புமா போன்ற உணவுகளை மாற்றிவிட்டு, ருசியான அதே வேளையில் உடலுக்கு சத்தான உணவுகளைக் கொண்டு வரும் திட்டத்தை வீணா ஜார்ஜ் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதுபோன்ற உணவுகள் அங்கன்வாடி மையங்களில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறுகிறார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த குட்டிப் பையன் ஷாங்கு, அங்கன்வாடி மையத்தில் பிரியாணியும் பொரிச்ச கோழியும் கேட்ட விடியோ பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், அதற்கு பதிலளித்த வீணா ஜார்ஜ், நிச்சயமாக அங்கன்வாடி மெனுவில் மாற்றம் செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

தற்போது, அங்கன்வாடி மைய மெனுவில் பிரியாணி சேர்க்கப்பட்டிருப்பது குறித்து ஷாங்குவிடம் கேட்டதற்கு, மிகவும் சந்தோஷமாக இருப்பதாக அதே மழலைக் குரலில் சொல்லியிருக்கிறாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com