
காவல் துறையின் ஆலோசனையை புறக்கணித்துவிட்டு அவசர கதியில் வெற்றிப் பேரணி நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பெங்களூரு அணி முதல்முறையாக ஐபில் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில், கர்நாடக பேரவை வளாகத்துக்கு முன்னர் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடியதாலும், சின்னசாமி திடலில் ஆரவாரத்துடன் அத்துமீறி நுழைய முயன்ற ரசிகர்களை தடுத்த காவல் துறை தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதில் லேசான தடியடி நடத்தப்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி, ஒன்றுமறியாத 11 பேர் பரிதாபமாக பலியாகியிருக்கின்றனர்.
இது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவசர அவசரமாக பாராட்டு விழாவுக்கு அனுமதியளித்தது யார் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை இறுதிப்போட்டி நடைபெற்றது. பெங்களூரு அணி வெற்றிபெற்றதும் கர்நாடக அரசு புதன்கிழமை பாராட்டு விழா மற்றும் பேரணிக்கு ஏற்பாடுகளைத் தொடர்ந்தது.
இரவில் மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் தீபாவளி போல தொடர்ந்ததால் போலீஸார் கண் விழித்துப் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி பாதுகாப்புப் பணிகள் ஜூன் 4 ஆம் தேதி இரவு வரை இருந்தது.
இதனால், பாராட்டு விழாவை ஞாயிற்றுக்கிழமையான ஜூன் 8 ஆம் தேதி நடத்திக் கொள்ள காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை கர்நாடக அரசு முற்றிலுமாக மறுத்துவிட்டு அவசர கதியில் நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலை நாள் அல்லாத ஞாயிற்றுக்கிழமையில் பாராட்டு விழா நடத்தினால், முறையான ஏற்பாடுகளை நடத்துவதற்கும், தடுப்புகள் அமைத்து போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் இருக்கும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அவர்உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா கூறும்போது, “இந்தப் பாராட்டு விழாவுக்கும் எங்களும் சம்பந்தம் இல்லை. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்தது. அரசு சார்பில் துணையாக இருக்கவேண்டும் என நாங்கள் பங்கேற்றோம்” என்றார்.
பாதுகாப்பு பணிகளில் 5000 காவல்துறையினர் ஈடுபட்டிருந்ததாக கர்நாடக துணை முதல்வர் டிகே. சிவக்குமார் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது 1000 பேர் மட்டுமே பணியில் இருந்ததாக நீதிமன்றம் தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.
பல்வேறு குழப்பங்கள், ஏராளமான பிரச்சினைகள் இருந்தபோதிலும், பாராட்டு விழா நடத்துவதிலேயே உறுதியாக இருந்த கர்நாடக அரசு. பலர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தாலும், மற்றொருபுறம் பாராட்டு விழா நடத்துவதிலேயே அரசு மும்முரம் காட்டியது. இதுவே பல்வேறு உயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ளதாகவும் ‘மனிதம் இறந்துவிட்டதாகவும்’ ரசிகர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.