ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!

கேரள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளதைப் பற்றி...
கேரள ஆளுநர் ராஜேந்த்ர விஷ்வநாத் அர்லேக்கர்
கேரள ஆளுநர் ராஜேந்த்ர விஷ்வநாத் அர்லேக்கர்ENS
Published on
Updated on
1 min read

கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதாவின் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது.

கேரளத்தின் ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இன்று (ஜூன் 5), மாநில அரசு மற்றும் ஆளுநர் சார்பில் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சி மேடையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயன்படுத்தப்படும் பாரத மாதாவின் உருவப் படத்தைக் காட்சிப்படுத்த ஆளுநர் மாளிகை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த நிகழ்ச்சிகளை கேரள மாநில அரசு புறக்கணித்துள்ளது.

இதுகுறித்து, கேரள வேளாண்துறை அமைச்சர் பி. பிரசாத் கூறுகையில், “மாநில அரசு பாரத மாதாவை மதிக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயன்படுத்தும் பாரத மாதாவின் உருவத்தை, ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அலுவலக நிகழ்ச்சியில் பயன்படுத்தியிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:

“இந்த விழாவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மட்டுமே தொகுத்தனர். நாங்கள் அதனை ஏற்றோம். ஆனால், நேற்று (ஜூன் 4) அவர்கள் திடீரென புதியதாக ஒரு நிகழ்ச்சியை இணைத்தனர். அதில், பாரத மாதாவின் படத்துக்கு மலர் மரியாதைச் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது அரசியலமைப்புக்கு எதிரானது; ஏனெனில், அந்தப் படம் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நாங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைத் தலைமைச் செயலகத்திலுள்ள தர்பார் ஹாலுக்கு மாற்றினோம்” எனப் பேசியுள்ளார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியானது மாநில அரசின் சார்பில் தலைமைச் செயலக வளாகத்தில் இன்று (ஜூன் 5) காலை 11 மணியளவில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இந்த நிகழ்ச்சி குறித்து கேரள ஆளுநர் மாளிகையின் தரப்பில், ஆளுநர் ராஜேந்தர விஷ்வநாத் அர்லேக்கரின் உரையுடன் கூடிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆளுநர் மாளிகையில் நடத்தவேண்டுமென முதலில் கேரள வேளாண்துறை அமைச்சர்தான் கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

“ஆளுநர் மகிழ்ச்சியுடன் அனுமதி அளித்தார். ஆனால், மேடையில் இடம்பெற்ற பாரத மாதாவின் உருவப்படத்தை அகற்ற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியதால், அந்தக் கோரிக்கையை ஆளுநர் நிராகரிக்க வேண்டியதாயிற்று. இதைத் தொடர்ந்து, அமைச்சர் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், காலை மற்றும் மாலை என இருவேளை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சிக்கிம் நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 63 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com