
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளக் கட்சி முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவை திருமணம் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து 2 ஆவது முறையாக மக்களவை உறுப்பினராக இருப்பவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா.
முன்னதாக நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டில் 2023-ல் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கடந்த 2024 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் மஹுவா மொய்த்ரா(50), கடந்த மே 30 ஆம் தேதி ஜெர்மனியில் பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ரா(65)வை திருமணம் செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணமானது போன்ற இருவரது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
எனினும் இருவரது தரப்பில் இருந்தும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இல்லை.
இவர் ஏற்கனவே டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் என்பவருடன் 3 ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பினாகி மிஸ்ரா, ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர். உச்சநீதிமன்ற வழக்கறிகஞரும் ஆவார். இவர் புரி தொகுதியில் 1996-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அடுத்து நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்து 2009, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் புரி தொகுதியில் தொடர்ந்து வென்றார்.
இவர் 1984ல் சங்கீதா மிஸ்ரா என்பவரைத் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.