4 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை! மகா கும்பமேளா நெரிசலில் பலியானோர் குடும்பங்கள் தவிப்பு!

கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இன்னும் இழப்பீடு வழங்காதது குறித்து வழக்கு.
maha kumbh
மகா கும்பமேளா கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என அலாகாபாத் உயர்நீதிமன்ற வழக்கு மூலமாக தெரிய வந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நடைபெற்றது. இந்நிலையில் ஜனவரி 29 ஆம் தேதி கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய மற்றும் மாநில பாஜக அரசை கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தன.

இந்நிலையில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி மனைவி உயிரிழந்த நிலையில் மாநில அரசு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என்று கூறி உதய் பிரதாப் சிங் என்பவர் தாக்கல் செய்த மனு அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சௌமித்ரா தயாள் சிங், சந்தீப் ஜெயின் அமர்வு முன்பாக இன்று(திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று கூறியதுடன், பிரேத பரிசோதனை செய்யாமல் இறந்தவரின் உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

"மனுதாரரின் மனைவியின் உடல், கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி ஒப்படைக்கப்பட்ட நிலையில் 4 மாதங்கள் ஆகியும் அவருக்கு அரசு அறிவித்த இழப்பீடு வழங்கப்படவில்லை. மக்களின் துயரத்தைப் பற்றி மாநில அரசுக்கு அக்கறையில்லை என்றே நாங்கள் கருதுகிறோம்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கருணையுடனும் கண்ணியத்துடனும் இழப்பீடு வழங்குவது அரசின் கடமை. அரசுதான் மக்களின் பாதுகாவலர். உயிரைப் பாதுகாப்பதற்கும் இழப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் அரசு கடமைப்பட்டுள்ளது. கும்பமேளாவில் முழு அதிகாரமும் அரசிடம்தான் இருந்தது. இறந்தவர் மீது எந்தத் தவறும் இல்லை.

கும்பமேளாவில் இறந்தவர்களின் விவரங்கள், அவர்களுக்கு செலுத்தப்பட்ட, செலுத்தப்பட வேண்டிய இழப்பீடு தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கும்பமேளாவில் எத்தனை பேர் இறந்தார்கள்? என்ற விவரங்களைக்கூட மாநில அரசு வெளியிட மறுப்பதாக காங்கிரஸ், மாநில எதிர்க்கட்சியான சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இறந்தவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்காதது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com