
உலகின் மிக உயரமான ரயில் பாலமாக கட்டப்பட்டுள்ள செனாப் பாலத்தின் கட்டுமானத்துக்கு சென்னை ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்ற மாதவி லதா முக்கிய பங்காற்றியுள்ளார்.
காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளிக்கும் 272 கி.மீ. தொலைவு கொண்ட உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம் கடந்த 1997-இல் தொடங்கப்பட்டது.
இதில், ரியாசி மாவட்டத்தில் பக்கல் மற்றும் கௌரி பகுதிக்கு இடையே சிந்து நதியின் துணை நதியான செனாப் நதியை கடப்பதற்காக பாலம் கட்டும் பணிக்கு 2003 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனிடையே, பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கிய சில நாள்களிலேயே புவியியல் சூழலைக் கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது.
புவியியல் ரீதியிலான பாலத்தின் உறுதித்தன்மையை ஆராய்ந்த பிறகு, 2010 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கின.
இந்த நிலையில், நாட்டின் நவீன பொறியியல் அதிசயமாக உருவெடுத்துள்ள செனாப் பாலம் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது.
1,315 மீட்டா் நீளம், 359 மீட்டா் உயரம் கொண்ட செனாப் பாலமானது பிரான்ஸில் உள்ள ஈபிள் டவரின் உயரத்தைவிட (330 மீட்டர்) அதிகம்.
யார் இந்த மாதவி லதா?
இந்த பாலத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுவது, புவியியல் ரீதியிலான இதன் கட்டமைப்புதான். காற்று, நிலநடுக்கங்கள், வெள்ளம் போன்ற அனைத்து சூழலையும் தாங்கும் உறுதித்தன்மையுடன் கட்டப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பம்சங்கள் மிக்க செனாப் பாலத்தின் புவி தொழில்நுட்ப ஆலோசகராக 17 ஆண்டுகள் பணியாற்றியவர்தான் மாதவி லதா.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாதவி லதா, காக்கிநாடாவில் உள்ள ஜவாஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பி.டெக்., வாரங்கல் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் எம்.டெக். முடித்துவிட்டு, சென்னை ஐஐடியில் புவி தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தற்போது, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
செனாப் பாலத்தின் கட்டமைப்பை மேற்கொண்ட முக்கிய ஒப்பந்ததாரரான ஆஃப்கான் நிறுவனத்துடன் இணைந்து, சிக்கலான புவியியல் மற்றும் நிலப்பரப்பு நிலைமைகளைச் சமாளிப்பதற்கான முக்கிய ஆலோசனைகளை தொடர்ந்து 17 ஆண்டுகளாக ஆராய்ந்து மாதவி வழங்கி வந்துள்ளார்.
சரிவுகள் ஏற்படாமல் பாறைகளை வைத்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
மேலும், செனாப் ரயில் பாலம் கட்டுமானம் தொடர்பாக ஆய்வறிக்கையையும் இந்திய புவி தொழில்நுட்பத்திற்காக எழுதியுள்ளார்.
விருதுகள்
தொழில்நுட்பத் துறையில் தொடர்ச்சியான இவரது சாதனைகளை கெளரவிக்கும் வகையில், சிறந்த பெண் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் விருது இந்திய புவி தொழில்நுட்ப சங்கத்தால் 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளானதை கொண்டாடும் வகையில், அறிவியல் (S), தொழில்நுட்பம் (T), பொறியியல் (E), கலை (A) மற்றும் கணிதம் (M) ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இந்திய பெண்களில் 75 பேர் ஸ்டீம் (STEAM) என்ற பெயரில் கெளரவிக்கப்பட்டனர். அதில், மாதவி லதாவும் ஒருவர்.
மாதவி லதாவின் சாதனைகளைக் குறிப்பிட்டு ஆந்திர பிரதேச ஆளுநர் சையத் அப்துல் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.