தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...

மேகாலயா தேனிலவில் கணவனைக் கொன்ற மனைவியின் சதிச் செயல் பற்றி...
சோனம், ராஜா ரகுவன்ஷி.
சோனம், ராஜா ரகுவன்ஷி.
Published on
Updated on
2 min read

திருமணமான பத்து நாள்களில் கணவனை கட்டாயப்படுத்தி மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்துச் சென்ற மனைவி, காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ளார்.

மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் சோனம் ஆகியோருக்கு கடந்த மே 11 ஆம் தேதி திருமணமானது. இதனைத் தொடர்ந்து, மே 20 ஆம் தேதி புதுமணத் தம்பதி இருவரும் மேகாலயாவுக்கு தேனிலவு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், மே 23 ஆம் தேதி அவர்கள் திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியாததால் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர்.

சடலமாக மீட்பு

காணாமல் போன தம்பதியினரைக் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் ரகுவன்ஷி உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியும் கையிலிருந்த மோதரமும் காணாமல் போனதால் நகைக்காக செய்யப்பட்ட கொலையாக இருக்கக் கூடும் என போலீசார் தொடக்கத்தில் சந்தேகித்தனர்.

தொடர்ந்து காணாமல் போன சோனத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே, சோனத்தின் தொலைப்பேசி அழைப்புகளை ஆராய்ந்த காவல்துறையினர், ராஜ் சிங் குஷ்வா என்பவருடன் சோனம் நீண்ட நேரம் பேசியதை கண்டறிந்து விசாரணையை மற்றொரு கோணத்திலும் தொடங்கினர்.

மேகாலயா மற்றும் மத்திய பிரதேச போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், ராஜ் சிங் குஷ்வா மற்றும் அவரது நண்பர்கள் மூவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரும் சோனத்துடன் இணைந்து ரகுவன்ஷியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனிடையே, உத்தர பிரதேசம் காஜிபூரில் திங்கள்கிழமை அதிகாலை சோனமும் கைது செய்யப்பட்டார்.

கொலை நடந்தது ஏன்?

சோனம், அவரது நிறுவனத்தில் பணிபுரியும் ராஜ் சிங் குஷ்வா (வயது 21) என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருமணத்துக்கு பிறகும் ராஜ் சிங் குஷ்வாவுடன் சோனம் பேசிவந்துள்ளார். முன்கூட்டியே திட்டமிட்டு, நகைகளுடன் கணவரை மேகாலயாவுக்கு தேனிலவு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.

பின்னர், நகைகளுடன் அங்கிருந்து தப்பி தலைமறைவான இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

கடந்த மே 16 மற்றும் 17 ஆம் தேதி இரவுக்கு மத்தியில் சோனமும் ராஜ் சிங்கும் சுமார் 6 மணிநேரம் தொலைபேசியில் உரையாடியதை போலீசார் கண்டுபிடித்த நிலையில், அதனடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பின்னர், திருமணமாகி 10 நாள்களில் அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவுக்கு தேனிலவு செல்வதற்கு கணவரை சோனம் அழைத்துள்ளார். அவர் தயங்கிய நிலையில், சோனமே விமான பயணச்சீட்டு, தங்கும் அறை உள்பட அனைத்தையும் முன்பதிவு செய்துள்ளார். ஆனால், தேனிலவில் இருந்து வீடு திரும்புவதற்கு விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யாதது காவல்துறைக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, ராஜ் சிங் அவரது பள்ளி பருவ நண்பர்களான இந்தூரைச் சேர்ந்த ஆகாஸ், விஷால், ஆனந்த்தின் உதவியை நாடியுள்ளார்.

திருமணத்துக்கு பின்னர் தேனிலவு செல்வதற்கு முன்பு, அதிகளவிலான பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து சோனம் எடுத்துள்ளார். தேனிலவின் போது, பிரத்யேக சிம் கார்டு மூலம் சோனமும் ராஜ் சிங்கும் அடிக்கடி பேசியுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

மேலும், ஆகாஷ், விஷால் மற்றும் ஆனந்த் ஆகியோர் குவாஹாத்தியில் ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனத்தை சுற்றுலாப் பயணிகள் போல் சந்தித்து, அவர்களுடன் மேகாலயாவுக்கு சென்றுள்ளனர்.

முன்பே திட்டமிட்டபடி, மேகாலயாவில் வைத்து அனைவரும் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிறகு ராஜ் சிங்கின் நண்பர்கள் மூவரும் இந்தூருக்குச் சென்று வழக்கம் போல் அன்றாட பணிகளை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, காஜிபூர் ஹோட்டலின் உரிமையாளரிடன், நகைக்காக சில கொள்ளையர்கள் தனது கணவனை கொன்றுவிட்டதாக பொய்த் தகவலை சோனம் பரப்பியுள்ளார். அதன்பிறகு போலீஸில் சரணடைவதை போல் நாடகமாடியுள்ளார்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ள சோனத்தை தனிப்படை காவல்துறையினர் மேகாலயாவுக்கு இன்று காலை அழைத்துச் சென்றனர்.

மேலும், சோனம் அப்பாவி என்றும் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் அவரது பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com