
இந்தூா்/ஷில்லாங்: மேகாலய மாநிலத்துக்கு தேனிலவு கொண்டாட அழைத்துச் சென்று, கூலிப் படையினா் மூலம் கணவரை தீா்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான சோனம், கூலிப்படையினருக்கு ரூ.20 லட்சம் கொடுத்திருப்பது தெரிய வந்திருப்பதாக மேகாலய காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலைச் சம்பவம் நடந்தபோதே, கணவரின் பர்ஸிலிருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்து, அவரைக் கொலை செய்த கூலிப்படையினருக்கு சோனம் நேரடியாகக் கொடுத்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், முதலில் ரூ.5 லட்சம் தருவதாக கூலிப்படையிடம் சோனம் பேசியிருக்கிறார்கள். கடைசி நேரத்தில் அவர்கள் கொலை செய்ய மறுத்துவிட்டதால், அவர்களுக்கு ரூ.20 லட்சம் தருவதாக பேரம் பேசி, இந்தக் கொலையை செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கூலிப்படையினரும், சுற்றுலாப் பயணிகள் போல நடித்து ராஜாவுடன் நட்பாகி, அவர்கள் செல்லும் இடங்களுக்குச் சென்று சந்தேகம் வராமல் இருந்த நிலையில், ஆளில்லாத இடத்துக்குச் சென்றதும், சோனம் சிக்னல் கொடுத்ததும், கூலிப் படையினர் கத்தியால் ராஜாவின் தலையில் அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல், உடலை எங்கு வீச வேண்டும் என்று சோனம் தேர்வு செய்து வைத்திருந்த இடத்துக்கு எடுத்துச் சென்று அங்கு ராஜா உடலை வீசவும் சோனம் உதவியிருப்பதாகக் கூலிப்படையினர் தெரிவித்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் இருந்துகொண்டே ராஜ் குஷ்வாஹா, சோனத்துடன் செல்போனில் பேசியே அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சோ்ந்த சோனம் (24) என்பவருக்கும் தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷிக்கும் (28) மே 11-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. சில நாள்களுக்குப் பின் மேகாலயத்துக்கு தேனிலவு சென்றனர் புதுமண தம்பதி.
தேனிலவு சென்ற இடத்தில் மே 23-ஆம் தேதி அறையை காலி செய்துவிட்டுப் புறப்பட்ட பிறகு இருவரும் மாயமாகினா். இது தொடா்பாக குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் மேகாலய காவல் துறையினா் இருவரையும் தேடினா்.
இதனிடையே, நொங்கிரியாட் கிராமத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அருவிப் பள்ளத்தாக்கில் அழுகிய நிலையில் ராஜா ரகுவன்ஷியின் உடல் கடந்த ஜூன் 2-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அதேநேரம், சோனம் காணாமல் போனார்.
காட்டிக்கொடுத்த உடல்கூறாய்வு
ராஜாவின் உடல்கூறாய்வில் தலையில் கூா்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்ததால், அவா் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுமண தம்பதிகளுடன் மேலும் மூன்று போ் இருந்ததாக சுற்றுலா வழிகாட்டி காவல் துறையிடம் சொன்னது மிக முக்கிய துருப்புச் சீட்டாக அமைந்துவிட்டது.
விசாரணை இறுகுகிறது என்பதை அறிந்த சோனம் உத்தர பிரதேச மாநிலம், காஜிபூரில் காவல் துறையிடம் சரணடைந்தாா். அப்போது, கணவரை தேனிலவுக்கு அழைத்துச் சென்று, கூலிப்படையினா் மூலம் கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், சோனத்தின் நண்பர் ராஜ் குஷ்வாஹா, கூலிப்படையனிர் கைது செய்யப்பட்டனர்.
சோனம் பெற்றோரின் தொழிற்சாலையில் கணக்காளராக இருந்த ராஜ் சிங் குஷ்வாஹாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை குடும்பம் ஏற்றுக்கொள்ளாமல், சோனத்துக்கு வேறிடத்தில் திருமணம் செய்துவைத்ததே இந்த தேனிலவு கொலைக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
சந்தேகம் எழாமலிருக்க ராஜ் குஷ்வாஹா மேகாலயம் செல்லவில்லை என்றும், கடைசி நேரத்தில் கொலை திட்டத்தை ரத்து செய்துவிடலாம் என்று ராஜ் சிங் நினைத்ததாகவும், அதனால்தான் மேகாலயம் செல்லவில்லை என்றும் இருவேறு தகவல்கள் வருகின்றன. ஆனால், எடுத்த முடிவில் சோனம் கடைசி வரை மாறாமல், கூலிப்படையினரிடம் பணத்தைக் கூட அதிகரித்து கொலையை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.