
ரயிலில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய தற்போது 60 நாள்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் பயணம் செய்யும் நாளுக்கு ஒருநாளுக்கு முன்னதாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ரயில் புறப்படும் நாளுக்கு அல்லது பயணம் செய்யும் நாளுக்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கு ஏசி பெட்டியும் காலை 11 மணிக்கு ஸ்லீப்பர் பெட்டிக்கும் முன்பதிவு தொடங்கும்.
இந்நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ரயில்வே அமைச்சகம் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி முதலாவதாக ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆதார் சரிபார்ப்பு (aadhaar verification) செய்யப்பட்டவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது.
இந்த புதிய நடைமுறை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் வருகிற ஜூலை 15 முதல் கவுன்டர்களில், பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய, ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பு (Aadhaar-based OTP authentication) மேற்கொள்ள வேண்டும்.
ரயில்வே கவுன்டர்களில் அல்லது முகவர்கள் மூலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, பயணம் செய்பவரின் ஆதார் சரிபார்ப்பு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணம் செய்பவரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்ட பின்னரே கவுன்டர்களில் அல்லது முகவர்கள் மூலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
மேலும், இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்களுக்கு தட்கல் முன்பதிவு நேரத்தில் 30 நிமிடங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏசி பெட்டிகளுக்கு காலை 10 முதல் 10.30 மணி வரையிலும் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு காலை 11 முதல் 11.30 மணி வரையிலும் முகவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.
தட்கல் சேவை, மக்களுக்கு முழுமையாக சென்று சேர இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்காக செயல்பட்டு வந்த 2.5 கோடி போலி கணக்குகளை ஐஆர்சிடிசி நிர்வாகம் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.