சில ஆண்களுக்கு மட்டும் மார்பகங்கள் பெரிதாக இருப்பது ஏன்? தடுப்பது எப்படி? சிகிச்சை என்ன?

சில ஆண்களுக்கு மட்டும் மார்பகங்கள் பெரிதாகத் தோன்றும் 'கைனகோமாஸ்டியா' நிலை பற்றி...
Enlarged breasts in men is gynecomastia
கோப்புப்படம்
Published on
Updated on
3 min read

ஆண்களில் சிலரின் மார்புப் பகுதி வீக்கமடைந்து பெரிதாக இருக்கும் நிலையை கைனகோமாஸ்டியா(gynecomastia) அல்லது ஆண் மார்பு வீக்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்...

சில ஆண்களின் மார்புகள் வீக்கமடைந்து பெண்களின் மார்பைப் போல தோற்றமளிக்கும். ஏன், உடை அணிந்திருக்கும்போதுகூட சிலருக்கு இது கவனிக்கத்தக்க வகையில் இருக்கும். அவர்களுடைய உடல்வாகும் அதற்கேற்றாற்போல தோற்றமளிக்கும். இதுவே கைனகோமாஸ்டியா(gynecomastia) என்ற மாறுபாடு. இது நோயோ அல்லது உடல் கோளாறோ அல்ல.

தேசிய சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி இந்திய ஆண்களில் சுமார் 40-60% பேர் தங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் கைனகோமாஸ்டியாவை எதிர்கொள்கின்றனர். ஒரு ஆண் குழந்தை பிறக்கும்போது, பருவமடையும்போது, முதுமை நிலை இந்த மூன்றில் ஏதேனும் ஒரு நிலையில் இந்த கோளாறு ஏற்படுகிறது.

சிறுவர்கள் பருவமடையும்போது சுமார் 50% பேருக்கு இந்த மாற்றங்கள் ஏற்படுகிறது. ஆனால் 90% பாதிப்புகள் 2 ஆண்டுகளுக்குள் அதுவாகவே சரியாகிவிடுகின்றன. நடுத்தர வயதினரின் சுமார் 65% பேர் பாதிக்கப்படுகின்றனர். வயதாகும்போது இது படிப்படியாக அதிகரிக்கிறது.

மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குவாசி கஸ்வான் அகமது இதுபற்றி கூறுகையில், ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாகவும் மார்பக சுரப்பி திசுக்களில் மாற்றம் ஏற்பட்டு அதன் அளவு அதிகரிப்பதால் 'ஆண் மார்பகங்கள்' ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

"இது ஆண்களில் மார்பகத் திசுக்களில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பை அதிகப்படுத்துகிறது. அதேநேரத்தில் டெஸ்டோஸ்டீரோன் சுரப்பைத் தடுக்கிறது. இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வினால் ஆண்களுக்கு மார்பக வீக்கம் ஏற்படுகிறது. இது ஒரு பக்க மார்பு அல்லது இரு பக்கங்களில் உள்ள மார்புகளிலும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். அதேநேரத்தில் இது உடலில் தேங்கும் கொழுப்புடன் எந்த தொடர்பும் இல்லை. இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

எனினும் சிலர் கேலிக்கு ஆளாவதால் இதுபற்றி கவலைப்படுகின்றனர். கவலை, பயம், விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் பலரும் இதனை வெளியில் சொல்ல பயப்படுகின்றனர். பாதிப்பு இல்லை என்பதால் சிலர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, அப்படியே விட்டுவிடுகின்றனர்" என்று தெரிவித்தார்.

ஆண்களின் மார்பு வீக்கம் தொடர்பாக சூடோகைனெகோமாஸ்டியா(pseudogynecomastia) என்று குறைபாடு உள்ளது. இது முழுக்க முழுக்க மார்பங்களில் கொழுப்பு அதிகம் சேர்வதால் ஏற்படுவது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இது வரலாம். இதற்கும் கைனகோமாஸ்டியாவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சிலருக்கு இந்த இரண்டு பிரச்னைகளும் சேர்ந்தே இருக்கலாம். எனவே, எதனால் மார்பு வீக்கம் என்பதை மருத்துவரின் மூலமாக தெரிந்துகொள்ள வேண்டும். கைனெகோமாஸ்டியாவில் மார்பகக் காம்பு மற்றும் அதற்கு கீழ் மார்பகத் திசுக்கள் அதிகம் இருக்கும். அந்த இடத்தில் வீக்கமாக இருக்கும் என்றும் டாக்டர் அகமது கூறினார்.

இதற்கு அறுவைச் சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வாக இருக்கிறது. பாதிப்பு இல்லை என்பதால் அப்படியே விட்டுவிடலாம், உடல்ரீதியாக சரிசெய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று ஃபரிதாபாத்தைச் சேர்ந்த டாக்டர் அனுஷ்டுப் தே கூறுகிறார்.

தில்லி ஆகாஷ் ஹெல்த்கேர் மருத்துவமனையின் டாக்டர் மோனிகா சர்மா,

"கைனெகோமாஸ்டியா ஆண்களின் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் ஏற்படலாம். பொதுவாக இது 10-14 வயதுகளில் பருவமடைதலின்போதும் பின்னர் முதுமையில் குறிப்பாக 50-60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரிடையே காணப்படுகிறது. பெரும்பாலாக இது கடுமையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தாது. எனினும் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது" என்று கூறுகிறார்.

நகர்ப்புறத்தில் உடற்பயிற்சி கலாசாரம் அதிகரித்து வருவதால் அதாவது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புவதால் இதனால் பாதிக்கப்படும் இளைஞர்கள் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்ய முன்வருவதாகவும் அதேநேரத்தில் பொதுவெளியில் இதன் பாதிப்பு குறைவாகவே உள்ளதாகவும் டாக்டர் அகமது தெரிவிக்கிறார். உடல் பருமன், ஹார்மோன் உற்பத்தியை சீர்குலைக்கும் ரசாயனங்கள், ஸ்டீராய்டு பயன்பாடு காரணமாக நகர்ப்புறங்களில் இதன் பாதிப்பு அதிகமுள்ளது என்றும் தெரிவித்தார்.

அறிகுறிகள்

மார்பகத் திசுக்களில் வீக்கம் அல்லது பெரிதாக இருத்தல்.

மார்பகம் மென்மையாவது அல்லது வலி போன்ற உணர்வு

மார்பகக் காம்புக்குக் கீழே உறுதியான அல்லது ரப்பர் போன்ற திசு

மார்பகக் காம்பில் மாற்றங்கள்.

சமச்சீரற்ற மார்பகங்கள்

உடல் தோற்றத்தால் உணர்ச்சி ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ மன உளைச்சல் ஏற்படுவது.

காரணங்கள்

ஹார்மோன் சமநிலையின்மை (டெஸ்டோஸ்டிரோன் குறைவது, ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பது)

உடல் பருமன் - ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்கும்.

ஸ்டீராய்டுகள், ஆன்டி-ஆண்ட்ரோஜன்கள், ஆண்டிடிரஸண்ட்ஸ், கீட்டோகோனசோல், சிமெடிடின், ஸ்பைரோனோலாக்டோன், ஆன்டிசைகோடிக்ஸ் மற்றும் சில உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடுகள்.

கல்லீரல், சிறுநீரக நோய், தைராய்டு இருப்பவர்களுக்கு கைனகோமாஸ்டியா ஏற்படலாம்.

ஆல்கஹால் உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாடுகள்

சில மூலிகை பொருள்கள் மற்றும் மூலிகை மருந்துகளாலும் பாதிப்பு ஏற்படலாம்.

தடுக்கும் முறைகள்

சீரான உணவு முறை, உடற்பயிற்சி பொதுவான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றாலும் இது எந்த வகையிலும் கைனகோமாஸ்டியாவைத் தடுக்காது.

உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மன அழுத்தம் வராமல் பார்த்துக்கொள்வது, மது, புகைப்பிடித்தலை தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் ஹார்மோன் சமநிலையை பராமரிப்பது சிறந்தது.

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் ஸ்டீராய்டு எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிகமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை வேகமாகக் குறைப்பதும் ஹார்மோன் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சிகிச்சைகள்

மருத்துவரை தொடர்புகொண்டு காரணமறிந்து பின்னர் தேவைப்படுமெனில் மார்பகத்தின் அளவைக் குறைப்பதற்கு அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளலாம்.

முன்னதாக ஆரம்ப நிலைகளில் ஹார்மோன் சுரப்பை சரிசெய்ய மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். மருந்துகள் பயனளிக்காதபட்சத்தில் அறுவைச் சிகிச்சை செய்யலாம்.

இதில் மார்பகத்தில் உள்ள கொழுப்பு திசுக்களுடன் மற்ற திசுக்களும் அகற்றப்படுகின்றன. இது பற்றிய விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com