
கன்னடம் பற்றிய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கமல் கருத்தைக் கண்டித்து கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன.
கர்நாடகத்தில் ஜூன் 5ஆம் தேதி 'தக் லைஃப்' படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும், மீறி திரையிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம் என்றும் கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுத்திருந்தன.
திரைப்படத்தை வெளியிடுவதற்கு கர்நாடக மாநில திரைப்பட வர்த்தக சபை தடைவிதித்துள்ளதை ரத்து செய்யக் கோரியும், திரைப்படத்தை வெளியிடுவதற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் ஜூன் 3ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில், கர்நாடகத்தில் ஜூன் 5-ஆம் தேதி 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என்று தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, கன்னட அமைப்புகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. கர்நாடகத்தில் 'தக்லைஃப்' திரைப்படமும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில் தங்களையும் பிரதிவாதியாக சேர்த்துக்கொள்ளும்படி கன்னட சாஹித்ய பரிஷத் மனுதாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், இந்த மனுவுக்கு பதில் மனுதாக்கல் செய்யும்படி கமல் தரப்புக்கு உத்தரவிட்டு அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.