
புணேவின் இந்திரயானி ஆற்றின் இரும்புப் பாலம் இடிந்து விபத்துக்குள்ளான இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்திற்குட்பட்ட மாவல் பகுதியில் இந்திரயானி ஆற்றின் குறுக்கே உள்ள இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி இன்று (ஜூன் 15) பிற்பகல் இடிந்து விழுந்தது.
இதில், 6 பேர் வரை உயிரிழந்ததாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. சுற்றுலாப் பயணிகள் உள்பட பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வார இறுதி விடுமுறை நாள் என்பதாலும், சுற்றுலா தலமாக குந்த்மாலா பகுதி உள்ளதாலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இன்று விபத்து நேரிட்ட பகுதிக்கு வந்திருந்தனர். இதனால், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் தீயணைப்பு வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து குறித்து மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
இந்த சம்பவத்தில் இறந்தவர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினரின் துயரத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்ட ஆணையர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.
சிலர் அடித்துச் செல்லப்பட்டதால், அவர்களைத் தேடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகள் உடனடியாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்துத் துறைகளும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 32 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் சிகிச்சை செலவையும் மாநில அரசு ஏற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.