
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், ஐஷ்பாக் விளையாட்டரங்கம் அருகே கட்டப்பட்டுள்ள ரயில் மேம்பாலம், நகரின் முக்கிய பேசுபொருளாகியிருந்த நிலையில், அதற்கு சவாலாக, ஆந்திரத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் புகைப்படம் வரலாகியிருக்கிறது.
கேரள காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், கூகுள் மேப்பில் இருந்த ஆந்திர மாநில மேம்பாலத்தின் வரைபடம் பகிரப்பட்டுள்ளது.
போபாலில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் அந்த ரயில் பாலம் இன்னும் திறக்கப்படாத நிலையிலேயே, 90 டிகிரி வளைவு இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்ற கோணத்தில் மக்கள் கவலை தெரிவித்திருந்தனர். கடந்த வாரம் முழுக்க இந்த மேம்பாலம் பேசுபொருளாகியிருந்த நிலையில், ஆந்திரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் சுற்றுச் சுவர் போல மூன்று கூர்மையான திருப்பங்களைப் பார்க்கும்போது பலருக்கும் கண்கள் சற்று விரியத்தான் செய்கின்றன.
மத்தியப் பிரதேசத்தில் 90 டிகிரி கோணத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வாகன ஓட்டிகளின் உயிர்களை காவு வாங்கக் காத்திருக்கும் நிலையில், தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் ஆந்திரத்தில் இப்படி ஒரு மோசமான பொறியியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் வாசுதேவபுரம் அருகே மாநில நெடுஞ்சாலை 57-ல்தான் இந்த மேம்பாலம் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வரைபடம், காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பேரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பலரும், இது கரோனா நேரத்தில் படித்த பொறியாளர்களால் கட்டப்பட்டது என்றும், கோயில் சுற்றுப்பாதை என்றும் ஏன் இதை வளைவாக அமைக்காமல், இப்படி அமைத்திருக்கிறார்கள்? ஏதேனும் காரணம் இருக்கிறதா என்றும் கருத்துகள் குவிந்துள்ளன.
இதையும் படிக்க.. இஸ்ரேல் - ஈரான் போர் உங்கள் பாக்கெட்டையும் காலி செய்யும்! எவ்வாறு?
போபால் 90 டிகிரி பாலம்
90 டிகிரி வளைவுடன் போபாலில் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலமே ஏற்கனவே கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்த மேம்பாலம், கிட்டத்தட்ட 90 டிகிரி கோணத்தில் வளைவுடன் அமைக்கப்பட்டிருப்பதால், இதன் வடிவமைப்பில் மிகப்பெரிய பிரச்னை உள்ளது என்றும், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இன்னமும் இது திறக்கப்படாத நிலையில், ரூ.18 கோடியில் கட்டப்பட்டிருப்பதாகவும், கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் தினமும் இதனைக் கடந்துசெல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.