
இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் சண்டையானது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை என்று மட்டும் நினைத்திருந்தால், அது மிகப்பெரிய தவறு. ஒட்டுமொத்த நாட்டுக்கும் பிரச்னைதான்.
உண்மையில் சொல்லப்போனால், இஸ்ரேல் - ஈரான் சண்டையானது ஏற்கனவே இந்தியாவை பாதித்துவிட்டது, அதன் தாக்கம் விரைவில் நமது பாக்கெட்டைப் பதம்பார்க்கவிருக்கிறது
சில காலமாக கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது என்ற செய்திகள் முடிவுக்கு வந்தன. இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கியதுமே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்வானது கிட்டத்தட்ட 11 சதவீதமாக உள்ளது. அதாவது ஒரு கச்சா எண்ணெய் பேரல் 75.32 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
இதனால் நமக்கென்ன என்று நினைத்தால் அது தவறு. காரணம், இந்தியா பல்வேறு நாடுகளிலிருந்துதான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்து, அதன் மூலம் போக்குவரத்து செலவு அதிகரித்து எல்லா விலைகளுமே உயர்ந்துவிடும் அபாயம் உள்ளது.
எனவே, இஸ்ரேல் - ஈரான் போர் அதிக நாள்கள் நீடித்தால், அது இந்தியாவில் விலையேற்றத்துக்கு வழிவகுத்துவிடும்.
இதையும் படிக்க.. போபாலின் 90 டிகிரி மேம்பாலத்துக்கு டஃப் கொடுக்கும் ஆந்திர மேம்பாலம் இதுதானா?
இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் போர் நடந்தாலும் கூட, அது நாட்டுக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
என்னவெல்லாம் விலை உயரும்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 120 அமெரிக்க டாலர்கள் வரை அதிகரிக்கலாம். இப்படி நடந்தால், இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும். அதற்குக் காரணம் நாடு முழுவதும் எரிபொருள் விலை அதிகரிப்பது, அதனால் போக்குவரத்து செலவு அதிகரித்து உணவுப் பொருள்களின் விலை உயர்ந்து, நாட்டில் அனைத்தின் விலைகளும் தாறுமாறாக அதிகரிக்கும் என்பதே.
அமெரிக்க தலையீட்டின் காரணமாக, இந்தியா, ஈரானிடமிருந்து நேரடியாக கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றபோதும், சர்வதேச எண்ணெய் சந்தையில் ஈரான் கோலோச்சி வருகிறது. எனவே, அங்கு எந்தப் பிரச்னை நேரிடினும் ஒட்டுமொத்த உலகையும் இந்தியாவையும் அது பாதிக்கும்.
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஹோர்முஸ் நீரிணை வழிப்பாதைதான் மிகவும் முக்கியமானது. இந்த நீரிணை வழித்தடம் எட்டு தீவுகளைக் கடந்து வருகிறது. இதில் ஏழு தீவுகளை ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ஒவ்வொரு நாளும், உலகம் முழுவதும் மூன்றில் ஒரு பங்கு கச்சா எண்ணெய், இந்த வழித்தடம் வழியாக கப்பலில் கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவுக்குத் தேவைப்படும் கச்சா எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கும் இயற்கை எரிவாயுவில் பாதியும் இப்பாதை வழியாகவே வருகிறது.
ஒருவேளை, ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தை ஈரான் மூடிவிட்டால், கச்சா எண்ணெய் விநியோகத்தை பெரிதும் பாதிக்கும். கப்பல்கள் மாற்றுப் பாதைகளில் அதிக தொலைவு பயணிக்கும் நிலை ஏற்படும். இது கச்சா எண்ணெய் விநியோக நேரத்தையும் போக்குவரத்து செலவையும் அதிகரித்துவிடும்.
அது மட்டுமா? இன்னும் இருக்கிறதே..
இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்தால், ஈரான் மற்றும் இஸ்ரேலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அன்றாடத் தேவையான சில பொருள்கள் விலை அதிகரிக்கும். அது எரிபொருள், சமையல் எரிபொருள், மின் சாதனங்கள், உரம், தொழிற்சாலைக்கான இயந்திரங்களின் விலைகள் கடுமையாக உயரும்.
இவ்வளவு வேண்டாம், மேற்சொன்ன ஹோர்முஸ் நீரிணை மூடப்படாலே போதும். விலை சொல்லொணாத் துயரமாக மாறிவிடும்.
போர் நீடித்தால் என்னென்னப் பொருள்கள் விலை உயரும்?
கெடுபயனாக இஸ்ரேல் - ஈரான் போர் விரைவில் முடியாவிட்டால், கீழ்க்கண்ட பொருள்கள் விலை உயரும்.
போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்கள்.
வேளாண்மைக்குத் தேவையான உரம்
ரசாயனங்கள், உப்புகள், பிளாஸ்டிக் பொருள்கள்
பழம், உலர் பழங்கள், சமையல் எண்ணெய்
இரும்பு மற்றும் இயந்திரங்கள்
நகைகள், விலைமதிப்புள்ள கற்கள்
இந்தியா யாருடன் நட்பு நாடு?
இஸ்ரேல் - ஈரான் என இரு நாடுகளுடன் இந்தியா நட்பு பாராட்டி வருகிறது. அந்த நாடுகளுக்குள் பிரச்னை இருந்தாலும், இரண்டையுமே நட்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா வைத்துள்ளது. இஸ்ரேலுடன் இந்தியா மின்னணு சாதனங்கள், பாதுகாப்புத் தளவாடங்கள், உரம், ரசாயனத் துறைகளிலும், ஈரானுடன் பழங்கள், ரசாயனம், சிமெண்ட், தொழிற்சாலை உப்புகள், எரிபொருள் தொடர்பான வணிகத்தையும் மேற்கொண்டு வருகிறது.
எனவே, போர் நீடித்தால்.. நமக்கென்ன என்று நினைக்க முடியாத அளவுக்கு, இஸ்ரேல் - ஈரான் போர் இந்தியர்களின் பாக்கெட்டுகளையும் காலி செய்யும் என்பதை நினைவில்கொள்வது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.