
சென்னை - தில்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல்வேறு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இன்று(புதன்கிழமை) தில்லியில் இருந்து 4.15 மணிக்கு சென்னைக்கு புறப்படவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல இன்று இரவு சென்னையில் இருந்து இரவு 8.40 மணிக்கு தில்லிக்கு புறப்படவிருந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். விமானப் பயணம் குறித்த தகவல் வெளிப்படையாக இல்லை என்று பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நிர்வாகக் காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விமானக் கட்டணம் பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டது. சௌதி அரேபியா தம்மமில் இருந்து வரும் விமானம் தாமதமாக வந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.