ஏர் இந்தியா விமான விபத்துக்கு அதிக எடை காரணம்? - முன்னாள் விமானி அதிர்ச்சி கருத்து!

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் பற்றி முன்னாள் விமானி கருத்து...
former pilot explained the reason for ahmedabad plane crash
முன்னாள் விமானி கௌரவ் தனேஜா
Published on
Updated on
2 min read

அகமதாபாத் விமான விபத்துக்கு விமானத்தின் அதிக எடை காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் விமானி ஒருவர் கூறியுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு 230 பயணிகள், 12 ஊழியா்களுடன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி பிற்பகல் 1.39 மணிக்கு புறப்பட்ட ஏா் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானம் ஏஐ 171, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் ஒரே ஒரு பயணி தவிர விமானத்தில் இருந்த 241 பேரும் விமானம் விழுந்த இடத்தில் மருத்துவ மாணவா்கள் என 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விமான விபத்துக்கான காரணம் குறித்து முன்னாள் விமானி கௌரவ் தனேஜா தனது யூ டியூப் பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.

விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விபத்துக்குள்ளானது ஏன்? என அவர் அதில் கூறியுள்ளார். இதற்காக விமானத்தில் பயணிப்போர், விமானம் குறித்து கண்காணிக்கும் ஃபிளைட்ரேடார் என்ற செயலியின் தரவைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடியோவில் அவர் பேசுகையில், "ஃபிளைட்ரேடார் செயலி தரவுகளின் மூலமாக விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், புறப்படுவதற்கு வழக்கத்தைவிட அதிக நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளது. விமானம் புறப்படும்போது ஓடுபாதையில் தூசு கிளம்பியது. இதனால் அந்த ஓடுபாதை முறையாக செப்பனிடப்படவில்லை என்று தெரிகிறது. ஓடுபாதை முடியும் இடத்தில் இருந்து விமானம் புறப்பட்டதும் மிகவும் அசாதாரணமானது.

விமானம் ஓடுபாதையில் அதிக நேரம் ஓடிய பிறகு மேலெழும்பியது. ஆனால் அதன் பின்னர் விமானத்தின் வேகம் குறைந்தது. அப்படியெனில் விமானத்தில் ஏதோ பிரச்னை இருந்திருக்கிறது. அதிக எடை காரணமாக விமானத்தை மேலெழுப்புவதிலேயே ஏதேனும் சிக்கல் இருந்ததா? ஏனென்றால் இதற்கு முன்பு இதுபோன்ற விபத்துகள் நடந்துள்ளன. 1993 ஆம் ஆண்டு ஔரங்காபாத்தில் விமானத்தில் அதிக எடை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

விமான நிறுவனங்கள் சரக்கு சேவைகளில் அதிக பணம் ஈட்டுகின்றன. அதனால் விபத்துக்குள்ளான விமானம் அதிக எடை கொண்டதாக இருந்திருக்கலாம். ஆவணங்களில் குறைவான சரக்குகளையே ஏற்றுவதாகக் கூறும் விமான நிறுவனங்கள், உண்மையில் வழக்கத்திற்கு அதிகமாக எடையை ஏற்றுகின்றன. விமானத்தில் அதிக எடைதான் விபத்திற்குக் காரணமா?

டெல் அவிவ் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று சரக்குகளின் எடையை சரியாக பதிவு செய்யாததால் விபத்துக்குள்ளானது. எனவே, அகமதாபாத் விமான விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு காத்திருக்கிறேன், விரைவில் வெளியிடுகிறேன்" என்று தனது விடியோவில் பேசியுள்ளார்.

கௌரவ் தனேஜா, ஏர்ஏசியா விமான கேப்டனாகவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரக்கு விமானத்தின் விமானியாகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனேஜா முந்தைய தனது விடியோவில், "இதுபோன்ற பெரிய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்களில் விபத்து ஏற்படும்போது விமானிகளைக் குறை கூறுவது மிகவும் எளிது. ஏனெனில் விமானிகளைள் குறை கூறினால் காப்பீடு தொகை கோருவதும் எளிது. பெரிய விமான நிறுவனங்கள், விபத்திற்கு தாங்கள் பொறுப்பேற்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்திய விமானிகள் திறமையானவர்கள் அல்ல என்று அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல" என்று விமானிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com