
வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமான சேவையை சில நாள்களுக்கு 15 சதவிகிதம் வரை குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 241 பேர் பலியாகினர். மேலும், விமான மோதிய கட்டடத்தில் இருந்த மாணவர்கள், பொதுமக்களும் பலியாகினர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 85-க்கும் மேற்பட்ட சேவைகளை ரத்து செய்தது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது,
இந்த நிலையில், சர்வதேச அளவில் 15 சதவிகித சேவைகளை அடுத்த சில நாள்களுக்கு குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,
"ஏர் இந்தியா சர்வதேச சேவைகளை 15 சதவிகிதம் வரை குறைக்கவுள்ளது. விமான செயல்பாடுகளின் நம்பகத்தன்மையை மற்றும் சிறந்த செயல்திறனை உறுதி செய்வதற்கும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
ஏர் இந்தியாவின் போயிங் 787-8/9 ரக விமானங்களில் பாதுகாப்பு ஆய்வு நடத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 33 விமானங்களில், 26 விமானங்களின் ஆய்வுகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விமானங்களின் ஆய்வு விரைவில் நடைபெறும்.
கூடுதலாக போயிங் 777 ரக விமானங்களையும் ஏர் இந்தியா பாதுகாப்பு ஆய்வு நடத்துகிறது.
இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக ஐரோப்பியா மற்றும் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் இரவு நேரங்களில் வான்வெளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இதன்காரணமாக, எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 6 நாள்களில் 83 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க ஏர் இந்தியா எதிர்கொள்ளும் சிக்கலான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அடுத்த சில வாரங்களுக்கு சர்வதேச பெரிய சேவைகளை 15 சதவிகிதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குறைப்பு நடவடிக்கை ஜூன் 20 முதல் குறைந்தபட்சம் ஜூலை பாதி வரை தொடரும்.
சேவை குறைப்பால் பாதிக்கப்படும் பயணிகளிடம் ஏர் இந்தியா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா மேற்கொள்ளும். திருத்தப்பட்ட புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.