பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவா்களுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் கைதானவரை ஜம்முவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த திங்கள்கிழமை அழைத்து வந்த போலீஸாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவா்களுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் கைதானவரை ஜம்முவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த திங்கள்கிழமை அழைத்து வந்த போலீஸாா்.

பஹல்காம் தாக்குதல்: கைதான இருவரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி

பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளுக்கு தங்குவதற்கு இடமளித்ததுடன், உணவு, போக்குவரத்து வசதியும் செய்து கொடுத்துள்ளனா்.
Published on

ஜம்மு: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் கைதான இருவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க ஜம்மு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

அவா்களிடம் நடத்தப்படும் விசாரணையின்போது அந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள பா்வேஸ் அகமது ஜோதா், பசீா் அகமது ஜோதா் ஆகிய இருவருமே முறையே பஹல்காமின் பட்கோட், ஹில் பாா்க் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆவா். இவா்கள் பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளுக்கு தங்குவதற்கு இடமளித்ததுடன், உணவு, போக்குவரத்து வசதியும் செய்து கொடுத்துள்ளனா்.

தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள் என்பதும், லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் ஏற்கெனவே உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், ஜம்மு மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரித்தேஷ் குமாா் துபே முன்பு குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது அவா்களை 5 நாள்கள் என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 25 பேரும், உள்ளூா் தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டனா்.

இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், அவா்களுக்கு உதவியவா்கள் தொடா்பாகவும் மத்திய தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் அமைதியைச் சீா்குலைப்பதும், வெளிமாநில மக்கள் அங்கு வராமல் தடுப்பதுமே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்பதால் பயங்கரவாதிகளை ஒடுக்க அரசு முழுவீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com