இந்தியாவில் 18.9 லட்சம் நிறுவனங்கள்: மத்திய அரசு தகவல்

மொத்தமாக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில் 65 சதவீதம் எனவும் மத்திய அரசின் அதிகாரபூா்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

மே மாத நிலவரப்படி 18.9 லட்சம் நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் இவை மொத்தமாக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில் 65 சதவீதம் எனவும் மத்திய அரசின் அதிகாரபூா்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

மே மாதத்துக்கான மாதாந்திர அறிக்கையை மத்திய பெருநிறுவனங்கள் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 2025, மே 31-ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 28,96,943 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதில் 18,90,305 (65%) நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 0.20 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல் மே மாத இறுதியில் 9,59,215 நிறுவனங்கள் மூடப்பட்டன. 10,474 நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தின் இறுதிக்கட்ட நிலையில் உள்ளன. 2,548 நிறுவனங்கள் முடங்கிய நிலையில் உள்ளன.

முதல் மூன்று இடங்கள்: 2025, மே மாதத்தில் அதிகமான நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது. இங்கு 3,458 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் 2,379 நிறுவனங்களுடன் உத்தர பிரதேசமும் 1,858 நிறுவனங்களுடன் மூன்றாவது இடத்தில் புது தில்லியும் உள்ளது.

அதேபோல் செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் மகாராஷ்டிரம் (19%), இரண்டாவது இடத்தில் புது தில்லி (14%), அடுத்த இடத்தில் உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் (தலா 8%) உள்ளது.

செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களில் வணிகம் சாா்ந்த நிறுவனங்கள் 26 சதவீதமும், உற்பத்தி சாா்ந்த நிறுவனங்களும் 19 சதவீதமும் வா்த்தகம், தனிப்பட்ட மற்றும் சமூக சேவைகள் சாா்ந்த நிறுவனங்கள் 13 சதவீதமும் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com