கோப்புப்படம்
கோப்புப்படம்

ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரிப்பு

ரஷியாவிலிருந்து இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த மே மாதம் அதிக அளவில் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
Published on

ரஷியாவிலிருந்து இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த மே மாதம் அதிக அளவில் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

முந்தைய மாதத்தைவிட 52% கூடுதல் நிலக்கரியை மே மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

ரஷிய விலைக் குறியீடுகளுக்கான மையத்தின் வணிக மதிப்பாய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி அங்கிருந்து வெளியாகும் ’கொமொ்சன்ட்’ வா்த்தக நாளேடு இத் தகவலை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலக்கரி அளவு மாதம் 10 லட்சம் டன் என்ற அளவை தாண்டியதில்லை. இந்த நிலையில் கடந்த மே மாதம் 13 லட்சம் டன் நிலக்கரி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகபட்ச ஏற்றுமதி என்பதோடு, முந்தைய ஏப்ரல் மாத ஏற்றுமதியைக் காட்டிலும் 52% கூடுதலாகும்.

அதுபோல, ‘பிக்மின்ட்’ நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ‘ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதியை அவ்வப்போது 10% அளவுக்கு உயா்த்தி வந்த இந்தியா, கடந்த மே மாதத்தில் 1.74 கோடி டன் அளவுக்கு இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து செய்துவந்த இறக்குமதி அளவைக் காட்டிலும் அதிகபட்சம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ரஷிய நிலக்கரி ஏற்றுமதியாளா்களின் நெகிழ்வான விலை நிா்ணயம், நிலக்கரியின் தரம் ஆகியவை, இந்தியா இறக்குமதியை அதிகரித்ததற்கான காரணமாக இருக்கலாம் என நிபுணா்கள் கருத்து தெரிவித்தனா் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த நிலக்கரி இறக்குமதியில் ரஷியாவிடமிருந்து மட்டும் 7.5% அளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தோனேஷியா முன்னணியில் உள்ளது. முந்தைய மாதத்தைவிட 16% அதிகரித்து 98 லட்சம் டன் நிலக்கரியை இந்தியாவுக்கு இந்தோனேஷியா ஏற்றுமதி செய்துள்ளது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து ஏப்ரல் மாதத்தில் 34 லட்சம் டன் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதே மாதத்தில் அமெரிக்காவிலிருந்து 43% கூடுதலாக - 20 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Open in App
Dinamani
www.dinamani.com