
இந்தியா - பாகிஸ்தான் போர், இந்தியா - அமெரிக்கா இடையேயான வணிக ஒப்பந்தம் என அனைத்தையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருவது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்தியாவுடன் ஒரு மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவிப்பினை வெளியிட்டிருந்த நிலையில்தான், ப. சிதம்பரம் இந்தக் கேள்வியை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ப. சிதம்பரத்தின் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நடைபெற்று வந்தபோது, சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை செயலர், சண்டை நிறுத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டார்.
அதுபோல, நேற்று, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து விரைவில் இந்திய வணிகத் துறை செயலர் அறிவிப்பினை வெளியிடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியா, அவுட்சோர்ஸிங் முறையை ஏற்றுக்கொண்டுவிட்டதா?
இந்தியா, உலக நாடுகளுடன் ஏதேனும் ஒப்பந்தம் மேற்கொண்டால், கூட்டாக இணைந்து அது குறித்த அறிவிப்பினை வெளியிடுவது அல்லது ஒருங்கிணைந்த கூட்டறிக்கையை வெளியிடுவது வழக்கம். அந்த வழக்கத்தை நாம் விட்டுவிட்டோமா என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேட்டுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றுவரும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகவுள்ளது என்று அமெரிக்க வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இது குறித்துத்தான் அமெரிக்க அதிபரும் பேசியிருக்கிறார். தற்போதைய 19,100 கோடி டாலா் மதிப்பிலான இருதரப்பு வா்த்தகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 50,000 கோடி டாலராக இரட்டிப்பாக்குவதை இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை.
அது மட்டுமல்ல, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற மோதலை வர்த்தக ஒப்பந்தத்தை முன்வைத்து நிறுத்தியதாக மீண்டும் வெள்ளிக்கிழமை டிரம்ப் பேசியிருக்கிறார். ஏற்கனவே அவர் பல முறை இதனைத் தெரிவித்திருந்த நிலையில், மோதலை தான் நிறுத்தியதாகக் கூறவேண்டாம் என அதிபர் டிரம்ப்பிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்ட பிறகு, ஒரு முறை போரை தான் நிறுத்தவில்லை என்று ஒப்புக்கொண்டாலும், தற்போது இரண்டாவது முறையாக அவர் அதேக்கருத்து தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
P. Chidambaram has questioned US President Trump's announcements on several important issues.
இதையும் படிக்க.. இந்தியாவுடன் விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.