கர்நாடக முதல்வர் மாற்றமா? எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை!

கர்நாடக எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை...
Will Karnataka Chief Minister change
சித்தரமையா, டி.கே. சிவக்குமார்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளரும் கர்நாடகத்தின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களை தனித்தனியாகச் சந்தித்து இன்றுமுதல் 3 நாள்களுக்கு ஆலோசனை நடத்துகிறார்.

முதல்வர் மாற்றமா?

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போதே, சித்தராமையாவுக்கும் டி.கே. சிவக்குமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவின. நீண்ட இழுப்பறிக்கு பிறகு மூத்த தலைவர்களின் பேச்சுவார்த்தை உறுதியைத் தொடர்ந்து டி.கே. சிவக்குமார் துணை முதல்வர் பதவியை ஏற்றார்.

முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும் கடைசி இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமாரும் முதல்வராக பதவி வகிக்க பேச்சுவார்த்தையின் உடன்பாடு எட்டபட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், சித்தராமையா முதல்வராகப் பதவியேற்று இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்த பேச்சு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளரும் ராம்நகர் எம்.எல்.ஏ.வுமான இக்பால் உசேன், ”இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மேலிடத்தில் ஒரு உடன்பாடு இருக்கிறது. அதன்படி சித்தராமையா ஆட்சியை ஒப்படைக்க வேண்டும், டி.கே. சிவகுமார் முதல்வராக வருவார், இரண்டு முதல் மூன்று மாதங்களில் கட்சி மேலிடம் முடிவை எடுக்கும்” எனத் தெரிவித்தார்.

சித்தராமையாவின் ஆதரவாளர்கள் அவரே முதல்வராகத் தொடர்வார் என்று தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த வாரம் தில்லிக்கு பயணம் மேற்கொண்ட சித்தராமையா கட்சியின் மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனை தொடர்பாக காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், பதவியை தக்க வைத்துக்கொள்ள அனைத்து முயற்சிகளையும் சித்தராமையா மேற்கொள்வார். முடியாத பட்சத்தில் மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவின் பெயரை அடுத்த முதல்வராக பரிந்துரைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை

கர்நாடக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து எம்எல்ஏக்களையும் தனித்தனியாகச் சந்தித்து ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆலோசனை நடத்துகிறார்.

இன்றுமுதல் மூன்று நாள்களுக்கு ஒவ்வொரு நாளும் 40 எம்எல்ஏக்களை சந்திக்கிறார். தொகுதி நிலவரம், நிதி ஒதுக்கீடு, அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொருவருடனும் 20 நிமிடங்களுக்கு மேல் சுர்ஜேவாலா பேசவுள்ளார்.

தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர் அல்லாத கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதையடுத்து, எம்எல்ஏக்கள் பதில்களின் அடிப்படையில் மேலிடத்துக்கு சுர்ஜேவாலா அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.

அதனடிப்படையில், அடுத்த இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை தொடர்பாகவும் முதல்வர் மாற்றம் தொடர்பாகவும் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com