
பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.
மேலும், இந்திய தேசியக் கொடியை அமைச்சர் முன்னிலையில் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரிட்டன், அயா்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஜெய்சங்கா் 6 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். தனது பயணத்தின் முதல்கட்டமாக பிரிட்டன் தலைநகா் லண்டனுக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், பிரதமா் கியா் ஸ்டாா்மரை சந்தித்தாா்.
பின்னா், வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமியின் ‘செவனிங் ஹவுஸ்’ இல்லத்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
அப்போது, செவனிங் ஹவுஸுக்கு வெளியே ஒன்றுதிரண்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள், ஜெய்சங்கருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
செவனிங் ஹவுஸில் இருந்து அமைச்சர் ஜெய்சங்கர் கார் ஏறுவதற்காக வெளியே வந்தபோது, பாதுகாப்பு காவலர்களை மீறி சாலைக்கு மத்தியில் வந்த காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் அமைச்சரை தாக்க முயற்சித்தார்.
பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்த நிலையில், அவர் கையில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடியை கிழித்ததால் பதற்றமான சூழல் நிலவியது.
இருப்பினும், காலிஸ்தான் ஆதரவாளர்களை கைது செய்யாமல் பிரிட்டன் காவலர்கள் எச்சரிக்கையுடன் விடுவித்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றது.
இந்தியா கண்டனம்
அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு குளறுபடியை கண்டித்து இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“பிரிட்டனில் வெளியுறவுத் துறை அமைச்சர் வந்தபோது நடந்த பாதுகாப்பு மீறல் காட்சிகளை நாங்கள் அறிந்தோம். பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் அடங்கிய அந்த சிறு குழுவின் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம்.
ஜனநாயக சுதந்திரத்தை தவறுதலாக பயன்படுத்தி இருப்பதை கண்டிக்கிறோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள நாடு, தனது ராஜாந்திர கடமைகளை முழுமையாக நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேசவிரோத நடவடிக்கைகளுக்காக காலிஸ்தான் ஆதரவு ‘நீதிக்கான சீக்கியா்கள்(சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ்)’ அமைப்பை இந்தியாவில் மத்திய அரசு தடை செய்துள்ளது.
கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றும் நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளை இந்தியா வலியுறுத்தி வருகிறது.
கனடாவில் இந்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை காலிஸ்தான் அமைப்பினர் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, கடந்த மாதம் பிரிட்டனில் கங்கனா நடிப்பில் வெளியான எமர்ஜென்சி திரைப்படத்தின் திரையிடலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் நிறுத்தி, அந்தப் படத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டமும் நடத்தினர்.
பிரிட்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.