
மகளிருக்கு ரூ.2,500 வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி அண்மையில் நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்தது.
இதையடுத்து தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். இந்தநிலையில் மகளிருக்கு ரூ.2,500 வழங்குவதாக அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தில்லி முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பாஜக அரசு அமைந்தவுடன், மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கக்கப்படும் என்றும், மகளிர் தினத்திற்குள் பெண்களின் கணக்குகளுக்கு நிதி சென்றடையத் தொடங்கும் என்றும் தில்லியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பிரதமர் உறுதியளித்திருந்தார்.
எனவே, மகளிர் தினத்திற்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தில்லி முழுவதும் உள்ள பெண்கள் இந்த வாக்குறுதி நிறைவேற ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பாஜக உறுதியளித்தபடி முதல் தவணை தங்கள் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
தில்லி பெண்களுக்கு அவர்களின் உரிமையை வழங்க, நிதி தாமதமின்றி மாற்றப்பட வேண்டும். நகரத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் நம்பிக்கையுடன் உங்களைப் பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.