தங்கம் கடத்தல்: 45 நாடுகளுக்குச் சென்ற கன்னட நடிகை! துபைக்கு 27 முறை!!

தங்கம் கடத்தலில் ஈடுபட்டட கன்னட நடிகை 45 நாடுகளுக்குச் சென்றிருந்ததும் துபைக்கு 27 முறை பயணம் மேற்கொண்டதாக தகவல்.
கன்னட நடிகை
கன்னட நடிகை
Published on
Updated on
2 min read

துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது கைதான கன்னட நடிகை, இதுவரை 45 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததும், துபைக்கு மட்டும் 27 முறை சென்று வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

கர்நாடக மாநிலம் சிக்மகளூரைச் சோ்ந்த நடிகை ரன்யா ராவ் (33), கா்நாடக காவல் துறையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் டிஜிபி கே.ராமசந்திர ராவின் வளா்ப்பு மகள். ராமசந்திர ராவின் இரண்டாவது மனைவிக்கும் அவரது முதல் கணவருக்கும் பிறந்தவா்தான் ரன்யா ராவ். பெங்களூரு, தயானந்தசாகா் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ரன்யா ராவ், 2014-இல் நடிகா் சுதீப்புடன் ‘மாணிக்யா’, ‘பட்டாக்கி’ ஆகிய 2 கன்னடப் படங்களிலும், 2016-இல் நடிகா் விக்ரம் பிரபுவுடன் ‘வாகா’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளாா்.

திரைப்படத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், இவா் அடிக்கடி துபைக்கு சென்று வந்துள்ளாா். கடந்த 15 நாள்களில் மட்டும் 4 முறை துபைக்கு சென்ற ரன்யா ராவ், பெங்களூருக்கு திரும்பும்போது அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து வந்துள்ளாா். காவல் துறை உயரதிகாரியின் வளா்ப்பு மகள் என்பதால், விமான நிலையத்தில் எவ்வித சோதனையும் இல்லாமல் வெளியே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, துபையில் இருந்து அதிக அளவிலான தங்க நகைகளை அணிந்தும், உடைகளில் தங்கத்தை மறைத்தும் கொண்டு வந்தநிலையில்தான் தற்போது கைதாகியிருக்கிறார்.

இவரது பாஸ்போர்ட் மூலமாக, இவர் 45 நாடுகளுக்குச் சென்று வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் எதற்காக இந்தப் பயணங்களை மேற்கொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

இந்த நிலையில், இவரது வழக்கில் பல கேள்விகள் விடை காணாப்படாமல் உள்ளது. அதாவது ரன்யாவுக்கு உதவியது யார்? இதுதங்கக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய வழக்கா? தங்கக் கடத்தல் கும்பலுக்காக இவர் வேலை செய்துவந்தாரா? தங்கக் கடத்தல் தொழிலை இவர் தனியாக செய்து வந்துள்ளாரா? என பல கேள்விகள் எழுந்துள்ளன.

மார்ச் 9ஆம் தேதி முதல் இவருக்கு மூன்று நாள்கள் போலீஸ் காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரன்யாவைப் பற்றி காவல்துறைக்கு துப்பு கொடுத்தது யார்?

காவல்துறைக்கு வந்த தகவலைத் தொடர்ந்த கடந்த சில வாரங்களாக நடிகை ரன்யா ராவை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர். மாா்ச் 3-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துபையில் இருந்து பெங்களூரு சா்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கிய நடிகை ரன்யா ராவிடம் விமான நிலைய போலீஸாரின் உதவியுடன் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை செய்தனா்.

இந்த சோதனையில், ரன்யா ராவ் தனது உடைகளில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். மேலும், அந்த தங்கக் கட்டிகளுக்கும், அணிந்து வந்த தங்க நகைகளுக்கும் ரன்யா ராவிடம் உரிய ஆவணங்களோ, சுங்கவரி செலுத்தியதற்கான சான்றுகளோ இல்லை. இதைத் தொடா்ந்து, நடிகை ரன்யா ராவை கைதுசெய்த மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரிடம் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள், நகைகளை பறிமுதல் செய்தனா்.

இந்த தங்க நகைகள், மிகப்பெரிய தங்க நகைக் கடையில் வடிவமைக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் இவ்வளவு மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தது இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள நடிகை ரன்யா ராவ் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை செய்ததில் சட்டவிரோதமாக வைத்திருந்த ரூ. 2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 2.67 கோடி மதிப்புள்ள ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

இதனுடன் சேர்த்தால், நடிகை ரன்யா ராவிடம் இதுவரை ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள், நகைகள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருப்பதாகவும், அதன்பிறகு அவருடன் தான் பேசவில்லை என்றும் டிஜிபி ராமச்சந்திர ராவ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com