
தன்னை சுட முயன்றதாக உதவியாளர் மீது பாஜக தலைவர் சீதா சோரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மூன்று முறை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏவாக இருந்த சீதா சோரன், கடந்த மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, பாஜகவில் சேர்ந்தார்.
பின்னர் நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஜம்தாரா தொகுதியில் போட்டியிட்ட அவர் ஜேஎம்எம் வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில் உதவியாளர் சுட முயன்றதாக சீதா சோரன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
வியாழக்கிழமை இரவு ஏதோ ஒரு பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, சீதா சோரனை நோக்கி உதவியாளர் கைத்துப்பாக்கியை நீட்டியதாக தன்பாத் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நௌஷத் ஆலம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தகவல் கிடைத்ததும், போலீஸார் ஹோட்டலை அடைந்தனர். உடனே அவரது(சீதா சோரன்) உதவியாளர் மனோரஞ்சன் கோஷ் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு நாட்டுத் துப்பாக்கியும் மீட்கப்பட்டது.
சீதா சோரனின் மெய்க்காப்பாளர் கோஷ் மீது பாய்ந்து அவரைக் காப்பாற்றினார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக ஷிபு சோரனின் மருமகள் சராய்தேலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.