
காங்கிரஸ் கட்சிக்குள் பாஜகவுக்காக வேலை செய்பவர்களை வெளியேற்றவிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சித் தொண்டர்களிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, ``குஜராத் மக்களுடன் ஓர் உறவை ஏற்படுத்த கட்சி முடிவு செய்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளாக குஜராத் மக்களின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸால் ஏன் நிறைவேற்ற முடியவில்லை?
இதன் பதில் என்னவென்றால், கட்சிக்குள் இருவகையான தலைவர்கள் இருக்கின்றனர். ஒன்று, பொதுமக்களுடன் நின்று அவர்களுக்காக போராடுபவர்கள்; மற்றொன்று, மக்களை மதிக்காமல் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறவர்கள். கட்சியின் இந்த இரு குழுக்களையும் பிரிப்பதுதான் எனது வேலை.
இருபதோ முப்பதோ இருந்தாலும் பரவாயில்லை; அவர்களைக் கண்டிப்பாக வெளியேற்றுவோம். இதனைச் செய்வதன் மூலம் குஜராத் மக்களுக்கு காங்கிரஸ் மீதான நம்பிக்கையும் கூடும்.
கட்சிக்குள் இருந்தாவாறு பாஜகவுக்கு வேலை செய்தால், கண்டிப்பாக அந்தக் கட்சிக்கே அனுப்பப்படுவீர்கள். ஆனால், அந்தக் கட்சியில் உங்களை ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
இங்குள்ளவர்களின் நரம்புகளில் காங்கிரஸ் ரத்தம்தான் இருக்க வேண்டும். காங்கிரஸை எதிர்க்கட்சியாகத்தான் குஜராத் மக்கள் விரும்புகின்றனர்; பாஜகவின் பி டீமாக அல்ல’’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.