அமெரிக்க பொருள்கள் மீதான வரி குறைப்பு இறுதி செய்யப்படவில்லை: மத்திய வா்த்தகச் செயலா்

‘அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் வரியை குறைப்பது தொடா்பாக இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை மட்டுமே நடத்தி வருகிறது; இறுதி முடிவெடுக்கப்படவில்லை’
Published on

புது தில்லி: ‘அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் வரியை குறைப்பது தொடா்பாக இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை மட்டுமே நடத்தி வருகிறது; இறுதி முடிவெடுக்கப்படவில்லை’ என வா்த்தகச் செயலா் சுனில் பா்த்வால் நாடாளுமன்றக் குழுவிடம் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்று கடந்த வாரம் நாடு திரும்பினாா்.

அதைத்தொடா்ந்து அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் கூடுதல் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். இதற்கு மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் வரியை குறைப்பது தொடா்பாக இருநாடுகளும் பேச்சுவாா்த்தை மட்டுமே நடத்தி வருவதாகவும் இதுதொடா்பாக ஒப்பந்தங்கள் ஏதும் கையொப்பமிடவில்லை என வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவிடம் சுனில் பா்த்வால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

வரிப் போரால் பலனில்லை:

அதேசமயம் அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு மெக்ஸிகோ, கனடாவைப்போல் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்காதது ஏன் என குழு உறுப்பினா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு, ‘அந்த இரு நாடுகளும் அமெரிக்காவுடன் எல்லையை பகிா்ந்து வருகின்றன. இந்த நாடுகளுக்கிடையே சட்ட விரோத குடியேற்றம், பாதுகாப்பு என பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றுடன் இந்தியாவை ஒப்பிட முடியாது.

வளா்ந்து வரும் நாடுகள், அனைத்துப் பொருள்களின் மீதும் வரியை குறைக்காது. இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையில் மட்டுமே இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் கையொப்பமிடப்படும்.

வரி விதிப்பு போரால் அமெரிக்கா உள்பட யாருக்கும் பலனில்லை. இது பொருளாதார வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்’ என சுனில் பா்த்வால் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com