‘பிரதிபிம்ப்’ மென்பொருள் மூலம் 6,046 இணைய குற்றவாளிகள் கைது: மத்திய அரசு
புது தில்லி: ‘இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (ஐ4சி) ‘பிரதிபிம்ப்’ என்ற புவி இருப்பிட தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) மென்பொருள் உதவியுடன் இதுவரை 6,046 இணைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.
இதுதொடா்பான கேள்வுக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமாா் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில் கூறியதாவது:
இணைய குற்றவாளிகள் குறித்த தரவுகளைப் பகிரவும், பகுப்பாய்வு செய்ய வசதியாக காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் ‘சமன்வயா’ என்ற மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான இணைய குற்றவாளிகளின் தொடா்பு குறித்த பகுப்பாய்வு தரவுகளை மாநிலங்கள் பகிா்ந்துகொள்ள முடியும்.
அதுபோல, இணைய குற்றவாளிகளின் இருப்பிடத்தை எளிதில் கண்டறியும் வகையில், ஐ4சி சாா்பில் ‘பிரதிபிம்ப்’ என்ற ஜிஐஎஸ் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், இணைய குற்ற விசாரணைக்கு 36,296 கோரிக்கைகள் விடுக்கப்பட்டு, 17,185 வலைதள தொடா்புகள் முடக்கப்பட்டு 6,046 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.