ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜக்கி வாசுதேவ் குறித்து யூடியுபர் வெளியிட்ட அவதூறு விடியோவை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ்
Published on
Updated on
1 min read

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் தனது யூடியுப் பக்கத்தில் ஈஷா அறக்கட்டளையில் சர்ச்சைக்குரிய பல சம்பவங்கள் நடைபெறுவதாக விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஜக்கி வாசுதேவ் அவரது ஆசிரமத்தில் சிறுமிகளை மேலாடையின்றி நிற்கச் சொல்வதாக அவர் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இதுதொடர்பாக, ஷ்யாம் மீரா சிங் ஈஷா அறக்கட்டளைக்கு மின்னஞ்சல் அனுப்பி கேள்வி கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈஷா அறக்கட்டளை சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

"ஷ்யாம் மீரா சிங் இதற்கு முன்பு ஒரு பிரபலமான நபர் பற்றி இதேபோன்ற விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுத்து விளம்பரத்திற்காக பரபரப்பான விடியோக்களை உருவாக்குவதே அவரது நோக்கம்" என்று ஈஷா அறக்கட்டளையின் வழக்குறைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஷ்யாம் மீரா சிங்
ஷ்யாம் மீரா சிங்

ஈஷா அறக்கட்டளை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் அவதூறு ஏற்படுத்துபவை என்றும் இது பொது மக்களின் பார்வையில் சம்பந்தப்பட்ட நபரின் நற்பெயரை கெடுப்பதுபோல உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவதூறு விடியோவை நீக்குமாறு ஷ்யாம் மீரா சிங்கிற்கு உத்தரவிட்ட அவர், பொதுமக்கள் அதனை பகிரவும், சமூக ஊடகத் தளத்திலும் பதிவேற்றவும் தடை விதித்தார்.

இந்த வழக்கு விசாரணை வருகிற மே 9 அன்று மீண்டும் நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com