ஹோலி பண்டிகை: மசூதிகளை திரையிட்டு மூட காவல்துறை உத்தரவு!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு மசூதிகளை திரையிட்டு மூட உத்தரவு.
உ.பி.யில் கடந்தாண்டு ஹோலி பண்டிகையின் போது தார்பாயால் மூடப்பட்ட மசூதி.
உ.பி.யில் கடந்தாண்டு ஹோலி பண்டிகையின் போது தார்பாயால் மூடப்பட்ட மசூதி. ANI
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை திரையிட்டு மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டிகையும் முஸ்லிம்கள் கொண்டாடும் ரமலானின் ஜும்மா நோன்பும் வருகிற மார்ச் 14 அன்று ஒரே நாளில் நிகழ்கிறது.

இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதி உள்பட10 மசூதிகளை திரையிட்டு மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சம்பல் எஸ்பி ஷ்ரீஷ் சந்திரா, “இரு சமூகங்களும் தங்களின் பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காகவும், சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரு சமூகங்களுக்கிடையே எந்தக் குழப்பமோ பதற்றமோ ஏற்படாமல் இருக்க 'சௌபாய்' எனப்படும் ஊர்வலம் நடைபெறும் பாதையில் அடையாளம் காணப்பட்டுள்ள பத்து மசூதிகள் திரையிட்டு மூடிவைக்கப்படும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கமான ஒன்றுதான்” என்று அவர் கூறினார்.

மேலும், குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை நாளன்று தொழுகையின் நேரம் சௌபாய் ஊர்வலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும் என்றும், இரு சமூகத்தினரிடையே சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊர்வலத்திற்கு முன்போ பின்போ வெள்ளிக்கிழமை தொழுகைக்கான நேரம் மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அந்த நாள்களில் வெளியாட்கள் மசூதிகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

உள்ளூர் அதிகாரிகள், உ.பி. காவல் துறையினர் ஆகியோருக்கு குறிப்பிட்ட நாளில் எந்தவித குற்றச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மிகக் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி ஹோலியன்று சம்பலில் உள்ள ஷாகி ஜமா மசூதி, லடானியா வாலி மசூதி, தானே வாலி மசூதி, ஏக ராத் மசூதி, குருத்வாரா சாலை மசூதி, கோல் மசூதி, கஜூர் வாலி மசூதி, அனார் வாலி மசூதி மற்றும் கோல் துக்கான் வாலி மசூதி ஆகிய பத்து மசூதிகள் திரையிட்டு மூடப்படவுள்ளன.

மேலும், மதக் கலவரம் எதுவும் நடைபெறாமல் இருக்க இரு சமூகத்தின் தலைவர்களும் சம்பல் காவல்துறையினரால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இரு மாதங்களுக்கு முன் சம்பல் ஜாமா மசூதி கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறி ஆய்வு நடத்த அதிகாரிகள் சென்றபோது கலவரம் ஏற்பட்டு 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com