
பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா - தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் திருமண வரவேற்பு மார்ச் 9ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, பெங்களூருவில் உள்ள பாலஸ் கிரவுண்ட் என்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற திருமண வரவேற்புக்கு, தன்னுடைய எக்ஸ் பக்கம் வாயிலாக அனைவரையும் அழைத்திருந்தார் தேஜஸ்வி சூர்யா.
அனைவரையும் தன்னுடைய திருமண வரவேற்புக்கு அழைப்பதாக விடியோ வெளியிட்டிருந்த தேஜஸ்வி, ஒரே ஒரு கோரிக்கையும் வைத்திருந்தார். அதன்படி, தன்னுடைய திருமண வரவேற்புக்கு வருவோர் பரிசாக மலர்களையோ பழங்களையோ கொண்டு வர வேண்டாம் என்றும், திருமண நிகழ்ச்சிகளின்போது பல கிலோ எடையுள்ள மலர்கள் வீணாவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், திருமண வரவேற்பும் சிறப்பாகவே நடந்து முடிந்துள்ளது. மீண்டும் ஒரு பதிவை போட்டுள்ள தேஜஸ்வி சூர்யா, இந்த முறை விருந்தினர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அதில் தனது திருமண வரவேற்புக்கு வந்திருந்தவர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொண்டதோடு, பிறகு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். அதாவது, தனது அழைப்பை ஏற்று இத்தனை பேர் வருவார்கள் என்று தான் எண்ணவில்லை என்றும், விழாவுக்கு வந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வரிசையில் நின்று மேடைக்கு வந்து வாழ்த்தியமைக்கு நன்றியும், அதிக நேரம் காத்திருக்க நேரிட்டதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் கூறியுள்ளார்.
மணமக்கள்..
தேஜஸ்வி சூர்யா 2019 ,2024 ஆம் ஆண்டில் பெங்களூரு தெற்கு தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். பி.டெக் பட்டதாரியான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
மணமக்கள் இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதற்கு ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.