அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்தியரான கொலம்பிய பல்கலைக்கழக மாணவியின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன் இளநிலை படிப்பை அகமதாபாத் சிஇபிடி பல்கலையிலும், முதுநிலை படிப்பை ஹார்வார்ட் பல்கலையிலும் படித்து முடித்தார். இவர், ‘காலநிலை மாற்றத்தால் விளிம்புநிலை மக்கள் சந்திக்கும் பிரச்னைகள்’ என்ற தலைப்பில் மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தற்போது முனைவர் பட்டம் பெற படித்து வந்தார். இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ரஞ்சனி ஸ்ரீனிவாசனின் கல்வி விசா அமெரிக்க அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ரஞ்சனி ஸ்ரீனிவாசனின் விசா மார்ச். 5, 2025 முதல் ரத்து செய்யப்படுகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர் மார்ச் 11 அன்று அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.
விசா ரத்து செய்யப்பட்டப் பிறகு நாட்டை விட்டு தாமாக வெளியேற சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுமதி உள்ளது. அதேபோல, அவர்களாக வெளியேறாவிட்டால் வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்படுவார்கள். கடந்த மாதம், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை இந்த முறையில் அமெரிக்கா நாடு கடத்தியது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் ரஞ்சனி ஸ்ரீனிவாசன் இருக்கும் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த உள்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் கிறிஸ்டி நோயம், “அமெரிக்காவில் தங்கி படிப்பதற்கு விசா கிடைப்பது தனிச்சலுகையாகக் கருதப்படுகிறது. நீங்கள் வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு ஆதரவு தெரிவிக்கையில் அந்த சலுகை ரத்து செய்யப்படும். பின்னர், இந்த நாட்டில் நீங்கள் இருக்கமுடியாது.
கொலம்பியா பல்கலையில் படித்த பயங்கரவாத ஆதரவாளர் ஒருவர் எல்லைப் பாதுகாப்புச் செயலியைப் பயன்படுத்தி தாமாக நாட்டை விட்டு வெளியேறியது மகிழ்ச்சியளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல்- ஹமால் இடையிலான போரைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை ஆதரித்துப் போராடும் மாணவர்களுக்கு கொலம்பியா பல்கலை மையப் புள்ளியாக மாறியுள்ளது.
பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த கொலம்பிய பல்கலையின் முன்னாள் மாணவரான மஹ்மூத் கலீல் என்பவர் கடந்தாண்டு பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தை முன்நின்று நடத்தியதால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரது க்ரீன் கார்ட் ரத்து செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கொலம்பிய பல்கலையின் லேகா கோர்டியா என்ற மாணவரும் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.